மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை காலை 7.00மணி தொடக்கம் 4.00மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் 09வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ளன. மாவட்டத்தில் 4 இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 13116 பேர் தபால் மூல வாக்களிப்பிற்கான தகுதி பெற்றவர்களாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டள்ளதுடன், அவற்றில் 81 வலயங்களுக்கு பொறுப்பாக உதவி தெரிவித்தாட்சி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் கடமைகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.பாதுகாப்பு பணியில் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையிலிடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
அதேசமயம்’ இன்றைய தினம் வாக்குப்பெட்டிகள் சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.