300 லீட்டர் சட்டவிரோதமாக கசிப்பு மதுபானத்துடன் 31 பேர் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர், மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புகளின் போது விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த கசிப்பு கசிப்பு மதுபானம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகரின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்காவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸார் நடத்திய தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்க்குடா, கல்லடி , தாழங்குடா,ஆரையம்பதி உட்பட பல இடங்களில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்ட நிலையிலும்,வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த கசிப்பு மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கசிப்பு மதுபானத்துடன் சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.