மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் தோட்டத் தொழிலில் இருந்து ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் மூலம் முழுமையாக செலுத்த படவில்லை என்றும் மேலதிக பணம் நிலுவையில் உள்ளதாகவும், அதனை பெற்று தருவதாக கூறி மஸ்கெலியா பகுதியில் உள்ள பல தோட்ட தொழிலாளர்களிடம் நபர் ஒருவர் பணம் வசூலித்து வருகிறார்.
குறித்த விடயம் இன்று (25) மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் மற்றும் மல்லியப்பு தோட்டத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தின் முத்திரை பதிக்கப்பட்ட கடிதத்தின் மூல பிரதிகளை காட்டி ஒருவருக்கு தலா ஐந்து இலட்சத்திற்கும் மேல் பணம் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்தினால் செலுத்த படாமல் உள்ளதாகவும், அதனை குறித்த திணைக்களத்தின் அதிகாரி மூலமாக பெற்று தருவதாகவும் அதற்கான முற்பணமாக இரண்டாயிரம் ரூபாய் செலுத்துமாறு கோரியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மஸ்கெலியா பகுதியில் பல இடங்களில் தனது கைவரிசையை காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இவர் மஸ்கெலியா லக்ஷபான தோட்டத்தில் வசித்து வருவதாக தெரியவருகிறது.
இது குறித்து இவர்களிடம் இருந்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .