இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்தியா-இலங்கை நாகரிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நெருக்கமான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் ஜெய்சங்கர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
1968ஆம் ஆண்டு பிறந்த விஜித ஹேரத், 2000ஆம் ஆண்டில் இருந்து கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
தற்போது அவர், வெளிவிவகாரத்துக்கு மேலதிகமாக, புத்த சாசன மற்றும் மத விவகாரம், ஊடகம் உட்பட்ட துறைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2004 -2005 ஆம் ஆண்டுக்காலத்தில் கலாசார அமைச்சராக பணியாற்றினார்.
முன்னதாக அமைச்சரவையின் மற்றுமொரு உறுப்பினரான ஹரிணி அமரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 16வது பிரதமராக நியமித்தார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான அமரசூரிய ஒரு கல்வியாளர், உரிமை ஆர்வலர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கல்வி மற்றும் சமூக நீதிக்கான பணிகளுக்காக அறியப்பட்டவர்.
சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குப் பின் இந்தப்பதவியை வகிக்கும் மூன்றாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்
ஹரிணி அமரசூரிய 2020 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தில் பிரவேசித்தார்.