இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை தொடர்ந்து கைது செய்து, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளை விதிப்பது குறித்த விடயத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், இலங்கை நீதிமன்றங்கள் இந்த கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கக்கூடாத தண்டனைகளை விதிக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 37 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தலா 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி இதேபோன்ற ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு வாரங்களிற்கு பிறகு ஐந்து பேர் தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது அவர்களின் தலைகளை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக மொட்டையடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.