வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல்.நதீர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வெள்ளிக்கிழமை(27) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி பகுதியில் வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
அத்துடன், கைதான ஐந்து சந்தேக நபர்களையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை சந்தேக நபர்களை இன்றுவரை(30) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் நபர் உட்பட அவரது நண்பர்கள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் 28 தொடக்கம் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வர் மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.