வவுனியாவில் சீனித் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான காணி விடுவிப்பு தொடர்பில் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில்
ஒன்றான ஜனநாயக போராளிகள் கட்சி தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றது.
குறித்த திட்டத்தின் பின்னால் சீனா இருப்பதாகவும் இவ்வாறான நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தாம் வீதிகளில் இறங்கி போராடுவோம் என்றும் குறித்த கட்சி அறிவித்திருக்கின்றது.ஆனால் இதிலுள்ள சிக்கலான விடயம் – குறித்த சீனித் தொழிற்சாலை திட்டத்தை கூட்டமைப்பின் முதன்மையான பங்காளிக் கட்சிகளில்
ஒன்றான ரெலோவே முன்மொழிந்திருக்கின்றது. அத்துடன் இதில் நேரடியாகவும் தொடர்புபட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் பிறிதொருபங்காளி கட்சி இதற்கு பின்னால் சீனா இருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரோ அல்லது கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களோ அமைதி காக்கின்றனர்.இந்த விடயங்களை ஆராய்கின்றபோது குறித்த திட்டம் முன்னர் வடக்கு மாகாண சபையால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான ஆய்வு ஒன்றையும் யாழ். பல்கலைகழகத்தின் விவாசய பீடம் மேற் கொண்டிருக்கின்றது. இதன்படி சீனித் தொழிற்சாலை இலங்கையில் தோல்வியடைந்த ஒரு திட்டமாக இருப்பதாகவும் இதன் காரணமாகவே சீனித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. மேலும் சீனித் தொழிற்சாலைக்காக கரும்புகள் பயிரிடப்படும்போது ஏனைய சிறுதானிய பயிர்ச் செய்கைகளை முன்னெடுக்க முடியாதென்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.இதனை கருத்தில்கொண்டுஅப்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ள முடியாதென்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் மாகாண சபைக்கான தேர்தல் திட்டமிட்டுப் பிற்போடப்பட்டுவரும் சூழலில் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் மீண்டும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. இதற்கான முதலீட்டை தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றே செய்யப்போவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் ஜனநாயக போராளிகள் கட்சியோ இதற்கு பின்னால்
சீனாவின் முதலீடு இருப்பதாகக் குறிப்பிடுகின்றது.
சீனா அண்மைக்காலமாக வடக்கு – கிழக்கில் ஆர்வம் காண்பித்து வருவது இரகசியமான விடயமல்ல. சீனத் தூதுவர் மன்னார் உட்பட வடக்கின் பல பகுதிகளில் நிலைமைகளை ஆராய்ந்திருந்தார். மன்னாரில் நின்றுகொண்டு இந்தியாவுக்கும் மன்னாருக்கும் எவ்வளவு தூரமென்றும் கேட்டிருந்தார். இவ்வாறானதொரு பின்புலத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் குற்றச்சாட்டுகளை இலகுவில் நிராகரிக்க முடியுமா?
சீனா இந்தத் திட்டத்துக்குப் பின்னால் இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதற்கு அப்பால் வடக்கு மாகாண சபையால் பொருத்தமற்ற தென்று நிராகரிக்கப்பட்ட திட்டமொன்றை மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் – ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்வதானது மாகாண சபையின் முக்கியத்துவத்தை தமிழர்களே தரம் குறைப்பதாகவே நோக்கப்படும். மாகாண சபை தேர்தல் நடைபெற்ற பின்னர் இந்தத் திட்டம் தொடர்பில் மாகாண சபையின் அனுமதியுடன் ஆராயப்படுவதே சரியானதாக அமையும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டுத் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான செயல்பாடுகள் கூட்டமைப்பையும் – அதேவேளை
மாகாண சபையின் அவசியத்தையும் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியது. மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறும் இந்தியாவிடம் கேட்டுக்கொண்டு மாகாண சபையின் தீர்மானத்துக்கு மாறான ஒரு திட்டத்தில் தமிழ் கட்சிகளே முரண்பட்டு முட்டி மோதுவதானது சரியான விடயமல்ல. சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.