ஜே.வி.பி கட்சி தமிழர் தாயகமான வடகிழக்கை பிரித்து தமிழர்களின் முதுகெலும்பை உடைத்தவர்கள் என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது அதேவேளை கிழக்கை மீட்கப் போகின்றோம், அபிவிருத்தியை செய்யப்போகின்றோம் என்றவர்கள் இன்று புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் ஒழிந்து திரிகின்றனர். எனவே தமிழினத்துக்காகவும் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என வடகிழக்கு முன்னேற்றக்கழத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வி.லவக்குமார் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகிழக்கு முன்னேற்றக்கழத்தின் தலைவர் வி.லவக்குமார் தலைமையில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை (1) தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த கால அரசியல் பயணங்களை பார்க்கின்றபோது பலவிதமானவர்கள் பலவிதமான அரசியல் கோணங்களிலே பயணித்தனர். அதில் ஒன்று இன்று ஜனாதிபதியாக வந்துள்ள ஜே.வி.பி கட்சிக்கு இன்று பெரிய அலைகள் மோதலாம், ஜே.வி.பி கட்சி பெரியளவில் வென்றிருக்கலாம், இளைஞர் யுவதிகள் இன்று மிகவும் உற்சாகமாக அவர்களை பின் தொடரலாம் ஆனால் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்பதற்காக நீதிமன்றில் வழக்கை தொடுத்து வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்தவர்கள் இவர்களே என்பது யாரும் மறுக்கமுடியாது உண்மையாகும்.
இன்று நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக கால்பதிப்பதற்கான காரணம் கடந்தகால அரசியல் வரலாற்றை பார்கின்றபோது பல பாடசாலைகளுக்கு கல்வி தேவைகள் இருந்தது அந்த தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே பாடசாலைகளை இழுத்து மூடிய வரலாறு இருக்கின்றது.
ஓமனியாமடு கிராமத்துக்கு கன்சலதன்ன என பெயரை மாற்றி அந்த கிராமத்தில் இருந்து வேல முக வித்தியாலயத்தை பூட்டி அந்த பாடசாலையை முற்றுமாக நடாத்த முடியாமல் தடுத்தார்கள். இதனை நாங்கள் எந்தவொரு அரசியல் பலமும் இல்லாமல் அந்த பாடசாலையை திறக்வேண்டும் என்ற ஒரே முயற்சியோடு போராடி அதனை மீண்டும் திறந்து இன்றும் அந்த பாடசாலை நடைபெறுகின்றது.
எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பி பலவிதமான தடைகள், எதிர்ப்புக்கு மத்தியிலே இலங்கை அரசையும் எதிர்த்து நாங்கள் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை நடாத்தவேண்டிய காலம் இருந்தது.
தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மாவீரர்களை வித்தாக விதைத்துள்ளனர். அதில் விதைக்கப்பட்வர்களின் கல்லறைகள் சிங்கள பேரினவாத இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு அங்கு மரக்கன்றுகளை நாட்டி அங்கு விதைகுழிகளில் மக்கள் அஞ்சலி செய்யமுடியாது சிங்கள பேரினவாதிகளும், சில அரசியல்வாதிகளும் தடைகளை உருவாக்கினார்கள். ஆனால் நாங்கள் மக்களின் பலத்துடன் அவர்களை அங்கிருந்து துரத்தி மீண்டும் மக்கள் சென்று மாவீரர்களை நினைவு கூரத்தக்கதான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தோம்.
இவ்வாறு வீட்டுத்திட்டம் குடிநீர் வசதி போன்ற பல சமூகம் சார்ந்த காரியங்கள் செய்து கொடுத்தது மட்டுமல்லாது பல போராட்டகளை செய்தோம். சத்துருக் கொண்டான் படுகொலை நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்களை பொறிக்கும் போது பலதவிதமான தடைகளை முகம் கொடுத்தோம்.
இன்று கிழக்கை மீட்கப் போகின்றோம், அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என மார்பு தட்டிக் கொண்டு சில அரசியல்வாதிகள் கிழக்கை சுற்றி வந்தார்கள். இந்த புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் எந்தவொரு நபர்களையும் காணமுடியாத ஒரு சூழல் கிழக்கிலே ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் நீதியற்ற வாழ்வு மக்களுக்கான சரியான செயல்களை செய்யாத படியினால் இன்று ஒழிந்து திரிகின்றனர்.
எனவே உங்கள் இடத்துக்கு வருவது எங்களுக்காக அல்ல உங்களுக்காக. தேசிய தலைவரால் ஒரே குடையின் கீழ் உருவாக்கப்பட்ட கட்சி இன்று சிதைந்து நிற்கின்றது. வடகிழக்கில் ஆயிரம் விகாரைகளை கட்டுவேன் என்ற சஜித் பிரேமதாஸவுக்கு, தமிழ் தேசியத்தில் இருக்கின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு முட்டுகொடுத்து அவர் வெற்றி பெற்றால் எங்களுடைய மாவட்டத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அணுசரனையாக செயற்பட இருந்தனர்.
எனவே மட்டக்களப்பு மக்களின் இருப்பை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைகாக்கவும், எங்கள் தமிழினத்துக்காகவும், தமிழ் பிள்ளைகளின் கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்றார்.