இறந்தவர்களின் உடல்களை எரிப்பது அல்லது புதைப்பதற்கு மாற்றீடாக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய இறுதிச்சடங்கு மையமான Co-op Funeralcare என்ற நிறுவனமே இந்த ஆண்டின் இறுதியில் குறித்த புதிய திட்டத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது, எரிப்பதற்கும், புதைப்பதற்கும் மாற்றாக நீர் தகனம் என்னும் புதிய முறை அறிமுகப்படுத்தவுள்ளது.
இறந்த உடலுடன், சுடுதண்ணீர் மற்றும் காரம் போன்றவற்றை சேர்த்து இறந்த உடலை நான்கு மணி நேரத்தில் சாம்பலாகவும், திரவமாகவும் மாற்றுவதே நீர் தகன முறையாகும்.
இந்த முறையின் மூலம் இறந்தவர்களின் உறவினர்களுக்கு, இறந்தவரின் அஸ்தி கொடுக்கப்படும் எனவும் இந்த தகன முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உடல்களை எரிப்பதால், அதிகளவு கார்பன்டை ஆக்சைடும், நச்சு வாயுக்களும் வெளியாகும் என்றும் புதைப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், இந்த நீர் தகன முறையைப் பின்பற்றுவதால் மத ரீதியாக ஆட்சேபனைகள் ஏதும் உள்ளனவா அல்லது சட்டத்தில் ஏதாவது இடையூறு உள்ளதா என்பது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 2021 ஆம் ஆண்டு மரணமடைந்த, சமூக ஆர்வலரும், ஆர்ச் பிஷப்புமான டெஸ்மண்ட் டுட்டு தனது உடலை நீர் தகன முறையில் தகனம் செய்வதற்கு முன்னதாகவே தேர்ந்தெடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.