ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் படுகொலைகள் தொடர்பிலான பலவற்றிற்கு சாட்சியங்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தினால் அதனை வழங்குவதற்கு தயாராகயிருப்பதாக ரவீந்திரன் குகன் என அழைக்கப்படும் முகமட் உஹசைன் தெரிவித்துள்ளார்.
நான் நடைபெற்ற விடயங்களை சில ஆணைக்குழுக்களிடம் தெரிவித்திருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸார் என்னை விசாரணைக்கு என அழைத்து தாக்கினார்கள். அதன்காரணமாக அவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்றபோது நான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்தேன். அதன்போது அங்கு இருந்த முக்கிய நபர் குண்டுவெடிப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் அனைவருக்கும் கேக் வழங்கினார். குண்டுவெடித்து சில நிமிடங்களின் பின்னர் என்னை அழைத்து உங்கள் சக்ரான் வெடித்துவிட்டான் என்று கூறினார்.
இவ்வாறான பல உண்மைகள் என்னிடம் உள்ளன. அவற்றினை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். ஆனால் அவற்றினை ஒரு ஆணைக்குழு நியமிக்கும்போதே என்னால் வழங்கமுடியும். அண்மையில் காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டது. குறித்த துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட போது பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பராஜசிங்கத்தினை சுடுவதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற உண்மை எனக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.