வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக பெரும்பான்மையான ஆசனங்கள் பெறுவோம் அதில் யாழ், மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகூடிய ஆசனங்களை எடுப்போம் எனவே தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுப்புக்களும், விலைபோகாது பேரம் பேசுவதற்கான வாய்ப்பை தமிழர் தேசமாக திரண்டு ஆணை வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் முதலில் நேற்று திங்கட்கிழமை (07) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய முன்னணி அகில இலங்கை காங்கிரஸ் சைக்கிள் சின்னத்திலே போட்டியிடுகின்றோம். எங்கள் நிலைப்பாடு மக்களுக்கு நன்கு தெரிந்த விடையம் ஒரு உறுதியான தலைமைத்துவமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் கடந்த 15 வருடம் மண்ணிலே ஒரு உறுதியான கொள்கையுடன் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக போராடிவருகின்றோம்.
எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களும் இல்லாமல் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பற்காக எந்தவொரு சந்தர்பத்திலும் விலைபோகாது பேரம் பேசுவதற்கான வாய்ப்பை எங்களுக்கு தாருங்கள் என்று மக்களிடம் பல தடைவை கேட்டு வந்துள்ளோம். அந்தடிப்படையில் கடந்த தேர்தலிலே இரண்டு ஆசனங்கள் யாழ் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்றது.
அந்த ஆசனங்களுடன் நாடாளுமன்றம் சென்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ன என்பதை இந்த மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், இலங்கை அரசுக்கும் மிக தெளிவாக தெரிவித்து வந்துள்ளோம். எனவே நடைபெறவுள்ள இந்த தேர்தலிலே தமிழர் தேசமாக திரண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கரத்தை பலப்படுத்தவேண்டும். ஏன் என்றால் எங்கள் தலைமை எந்த சந்தர்பத்திலும் விலைபோகாது என்பதுடன் இன்று வடகிழக்கில் கொஞ்சமாவது தமிழ் தேசியத்தை நேசிக்கின்றார்கள் என்றால் அது எமது கட்சியின் போராட்டத்தின் வாயிலாகவும், உறுதியான கொள்கையினாலுமேயே இருக்கின்றது.
எனவே மக்களுக்கு நன்கு புரியவேண்டும் இந்த மண்ணிலே நடந்தேறியுள்ள இந்த இனப்படுகொலைக்கான பரிகாரம் பெறப்படவேண்டும். அந்த இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் எங்களுக்கு அதிக பெரும்பான்மை இல்லாத சந்தர்ப்பதில் தான் சர்வதேச சமூகத்திடம் எடுபடாமல் இருக்கின்றது. ஆகவே வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் மிக விழிப்பாக இருக்கின்றனர் எனவே இந்த தேர்தலிலே மிகப் பெரிய பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள்.
தென்பகுதி மக்கள் ஊழலை ஒழிப்பதற்காக மாற்று தலைமையை தெரிவு செய்துள்ளனர். அதேபோன்று வடகிழக்கு பிரதேசத்திலே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய முன்னணி எனவே அந்த ஆணையை மக்கள் கட்டாயமாக வழங்கவேண்டும் என்றார்
இதேவேளை இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், தலைமையில் சுப்பிரமணியம் சத்தியநாதன், கணவதிப்பிள்ளை குககுமாரராசா, அழகையா தேவகுமார், விஸ்னுகாந்தன் சௌமியா, குமாரசிங்கம் லிவாஸ்கர், முத்துக்குட்டி சத்தியகுமார், விநாயகம் தரணிகரன் ஆகிய 8 பேர் களமிறக்கப்பட்டு போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.