தமிழரசு கட்சி சார்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட சுரேகா தொடர்பாக பல்வேறு வகையான விமர்சனங்களும், பல்வேறு வகையான கருத்துக்களும் பலராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர் கடந்த காலத்தில் ஜே.வி.பி உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும், அநுர குமார திசாநாயக்கவோடு நேரடி தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் தமிழரசு கட்சி சார்பில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டதற்கு பிறகு அவர் தொடர்பான விமர்சனங்கள் மிக அதிகளவில் வரத்தொடங்கியது.
இது தொடர்பில் அவர் தற்பொழுது ஒரு அறிக்கையை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தினமும் வந்து போகின்ற உள்ளூராட்சி சபைகளில் சேவையாற்றத்தொடங்கிய போது தான் , பொதுமக்கள் சேவையும் , சேவை பெற்ற பின், அந்த மக்கள் மனங்களில் தெரியும் பூரிப்பும் கடந்து வந்த எல்லா இன்பங்களையும் விட மனதிற்கு இனிமையானது என்ற உண்மை எனக்குப்பிடிபட்டது.
அதற்காக சில உயர் அதிகாரிகளிடம் புகழையும் , பாராட்டையும் பெற்றுமிருக்கின்றேன். மாறாக சில உயரதிகாரிகளால் ‘” இந்த மாதிரி மக்களுக்குச் சேவை செய்யவேண்டுமென்றால், நீர் அரசியலுக்குத்தான் வரவேண்டும்.
இங்கே சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதும் ” என்று திட்டும் வாங்கியிருக்கின்றேன். அந்த அளவிற்கு மக்களுடன் இலகுவாக அணுகி , எளிமையாகவே அவர் தம் சேவைகளை ஆற்றும் பக்குவம் எனக்கு இயல்பாகவே இருந்துவந்தது .
மக்கள் நலன் பற்றிச் சிந்திக்கின்ற எந்தக்கூட்டங்கள் , எந்தப்போராட்டங்கள் , எந்த மனிதர்களைக் கண்டாலும் , அவர்களுடன் கைகொடுத்து , புகைப்படம் எடுத்து , அவர்கள் கொள்கைகளை நெருங்கி நின்று அவதானித்துக்கொள்வேன்.
மனிதர்களின் நடத்தைக்கோலங்கள் என்பது , நேரத்திற்கு நேரம் மாறக்கூடியளவில்
சமூக இயக்கம் இருக்கின்றது. பல வேறு விடயங்கள் அதற்குச்செல்வாக்கும் செலுத்துகின்றது என்பதை அறிவாலும் அனுபவத்தாலும் நன்கு தெரிந்தே வைத்தும் இருந்தேன் .
எந்த மறைமுக அணுகுமுறையாலும் என்னைப்போர்த்து மூடிப்பழகவில்லை, அனைத்தும் உள்ளங்கை நெல்லிக்கனி . ஆமாம் வெளிப்படை.
கால் போன போக்கிலே சென்றாலும் , எங்கே கால் ஊன்றுவது என்றும் , மக்களை முழுமையாக நேசித்துப் பரிவோடு சேவையாற்றும் தலைவர்களை இனங்கண்டு , அவர்களைப்பலப்படுத்தி , மக்களை அவர்களது வாழ்வியல் அல்லல்கள் / துன்பங்களில் இருந்து விடுபட நானும் பாடுபட வேண்டும் / பங்காற்ற வேண்டும் என்றும் பல முறை சிந்தித்திருக்கின்றேன் .
அதுவும் ஆணாதிக்க அதிகாரம் படைத்த தமிழ்ச்சமூகத்தில் பெண்கள் படும் துயரங்களை , தூரக்கொண்டு போக , விரைவாக செயலாற்ற வேண்டும் என்று பல பெண்ணியச்செயற்பாட்டாளர்கள் , பெண்ணியவாதிகள் , பெண்கள் அமைப்புக்களைத்தேடியும் இருக்கின்றேன் .
ஊர்ச்சன சமூக நிலையங்கள் தொட்டு , உலகளாவிய அமைப்பு என்று சொல்லப்படுகின்ற நிறுவனங்கள் , ஏன் அரசியல் கட்சிகள் வரை ஏறி இறங்கி , தன்னந்தனியாகவே வழிதேடி அலைந்த நாட்கள் பல சட்டத்துறை மாணவியான பின்னர், மேற்கட்டுமானங்களில் இருந்து சமூக முறைமைகளை அலசும் , தெளிவும் அறிவும், இலங்கைச்சனநாயக குடியரசுக்குள் இருந்தவாறு பல்லின சமூகங்களோடு சரிக்குச்சரியாக சம வாய்ப்புக்களுடன் சம உரிமைகளுடன் வாழவேண்டும் என்றால் ஒரே வழி சமூக ஒப்பந்தத்தை , சமமாக வரையறுக்கவல்ல ஓர் அரசியலமைப்பும் , அரசியல் கோட்பாடுமே இறுதி முடிவு என புரிந்துகொண்டேன்.
அதற்காக தொலைதூரக்கனவுகளுடன் , பாராளுமன்றங்களிலும் , பொது மேடைகளிலும் , சமூகத்தளங்களிலும் , ஊடகங்களிலும் , ஏன் நேரிலும் கண்டு கொண்ட , சுமந்திரன் அவர்களையும் , அவர் பயணிக்கும் இலங்கைத்தமிழரசுக்கட்சி என்ற வாகனத்தையும் , உற்று நோக்கி, உறுதியுடன் , அது ஒன்று தான் கூட்டுச்சமூகமாக தமிழ்த்தேசியத்தைக் கட்டிக்காக்கவல்ல , நேர்மை , தியாகம் ,அர்ப்பணிப்பு , ஆளுமை கொண்ட ஒரே இடம் என்பதை நம்பத்தொடங்கினேன்.
அந்த நம்பிக்கையைப் புறந்தள்ளி மேல் வர எந்த நம்பிக்கையும் , எந்தத் தளத்திலும் , எந்தக்காலத்திலும் ; தமிழர்களால் இனி உருவாக்கவே முடியாது என்பதையும் களநிலைமைகள் படம்போட்டுக்காட்டிக்கொண்டே இருந்தன .
எந்தக்காலத்திலும் அரசியல் அமைப்புக்குள் சென்று என் பரந்த சர்வதேசிய சிந்தனைகளைச்சுருக்கக் கூடாது என்று பிரயாசைப்பட்டிருந்தாலும், சில தினங்கள் முன் இலங்கைத் தமிழரசுக்கட்சி திறமையான , படித்த , ஆர்வம் கொண்ட , செயற்பாட்டுநுட்பம் கொண்ட பெண் வேட்பாளர்களைத் தேடுவதாக , அறிவித்தமை என் காதுகளிலும் விழுந்தது.
அரசியல் கட்சிகளுக்குள் எத்தனை பெண்கள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் , அனுதாபத்தாலும் , விதவை அரசியலாலும் , எழுந்தமானமாகக் குலுக்கல் முறையிலும் உள்நுழைந்து கட்சி ஆண்களைக்குறை சொல்லிக்கொண்டு , தேர்தல் தவிர எந்தக்களத்திலும் பெண்ணுரிமைக்காக போர்க்கொடி தூக்காத பெண்களையும் , நினைத்துப்பார்த்தேன்.
கடந்து போன தொடர் காலங்களில் நிகழ்ந்த பெண்களின் வன்முறைகள் , நெருடலான கதையாடல்கள் , மென்னுணர்வுகளைக்கொன்று புதைக்கும் நிலைமைகள் என பலதும் பத்தும் ஒன்றன் பின் ஒன்றாக என் மனவலைகளில் , அடித்துக்கொண்டிருந்தன.
வடக்கு மாகாணத்தில் வலுவான பெண்கள் அமைப்பை உருவாக்கி , பெண்களின் உடல் , உள , சமூக வன்முறைகளை இல்லாதொழிக்கும் பரந்த வலையமைப்புடன் செயலாற்ற வேண்டும் என்ற என் கனவு ; எனக்குள் உரமாக எதையோ சொல்லிக்கொண்டிருந்தது .
எவ்வாறெனினும் பெண்களை அரை சதவீதத்திற்கும் மேலாகக் கொண்டிருக்கும், இந்த நாட்டுக்கு அதிகாரமும் வலுவும் மிக்க பெண்பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதும், அந்த இடத்திற்கு என் தகைமைகள் , தகுதிகளை வைத்து நான் ஏன் விண்ணப்பிக்கக்கூடாது என்றும் நினைத்துக்கொண்டேன்.
யாரோ ஒரு பெண் அந்த இடத்தை நிரப்பித்தான் ஆக வேண்டும். அரசியலில் இருந்த பெண்களைத் தாண்டி செயற்பாட்டு அரசியலில் தனி மனுசியாகவே நான் செயற்பட்டுவந்திருக்கின்றேன், பகைமைகளைக் கடந்திருக்கின்றேன், பாடுபட்டிருக்கின்றேன் என்ற உளமார்ந்த நம்பிக்கையும் , ஆர்வமும் என்னையும் விண்ணப்பிக்கச்செய்தது, விண்ணப்பித்தேன் .
தனிப்பட்ட எனது வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் , கடைசியாக இருந்த எமது உண்மைத்தமிழ்த்தேசியக்கட்சி , உரிய ஆளில்லாமல் போவதா என்றும் , பற்றிப்பிடித்துக்கொண்டேன் , இன்று இலங்கைத்தமிழரசுக்கட்சி என்ற இந்த பாரம்பரிய வாகனத்தில் பலத்த ஆசைகளுடன் , கால் எடுத்து உள் நுழைகின்றேன் .காலத்தின் கணக்குகளை , மனிதர் நாம் தடுக்கமுடியுமா என்ன பார்க்கலாம்.
குறிப்பு : புகைப்படங்களைக்கொண்டோ , பகிர்வுகளைக்கொண்டோ நீங்கள் , போடும் வட்டங்களை என்றோ தாண்டியவள் ; வட்டத்தைத் தகர்த்து மையம் விளிம்பு கடந்து மனிதத்தை நேசிப்பவள். ஆதலால் சேறு சுரி பூசும் எந்த செயலும் என்னை பின்வாங்கச் செய்யப்போவதில்லை கண்ணில் தெரியும் ஒரே சொல்.