ஜனாதிபதி தேர்தலிலே தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி அவர் போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது அந்த சங்கு சின்னம் என்பது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடியில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் பொதுமக்கள் சபையானது ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் அந்த சங்கு சின்னம் பயன்படுத்தப்பட்டது. இப்போது அந்த சங்கு சின்னம் என்பது ஒரு கட்சியின் சின்னமாக மாற்றப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனநாயகம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது தனது குத்து விளக்கு சின்னத்தை விட்டு விட்டு சங்கு சின்னத்தை எடுத்திருக்கின்றனர்.
இந்த பொதுமக்கள் சபை சார்பாக நிறுத்தப்பட்ட அந்த தமிழ் வேட்பாளருக்கு ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தனர். இன்னுமொரு பகுதியில் இந்த தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு ஐக்கிய மக்கள் சக்தியை வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்துவிட்டது.
இப்போது நாங்கள் சங்கு சின்னத்தையோ அல்லது தொலைபேசி சின்னத்தையோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. இப்போது நாங்கள் தமிழரசு கட்சியின் சார்பாக வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என்றால் தமிழ் மக்கள் தங்களுடைய தாய் கட்சியான தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட அந்த தமிழர்களின் தாய் கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் பொறுப்பாக இருக்கின்றது.
பொதுமக்கள் கட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளரின் சின்னமாக இருந்த சங்கு சின்னம் இப்போது ஒரு கட்சியின் சின்னமாக அதாவது குத்துவிளக்கில் சின்னமாக இருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போது சங்கு சின்னத்தை எடுத்துள்ளது. எனவே தமிழ் மக்கள் குழப்பம் அடையாமல் நீங்கள் இந்த முறை தமிழரசுக் கட்சி என்ற அடிப்படையில் நீங்கள் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மிகவும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.