எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர, அனைத்து சுயேட்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் வைப்புச் செய்ய வேண்டும்.
அதன்படி நேற்று (09) வரை 293 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரையில், இதுவரையில் அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. அதன் எண்ணிக்கை 42 ஆகும்.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 88 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
46 அரசியல் கட்சிகளும், 42 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (11) நண்பகல் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்களை கையளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்பின், ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய, ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.