இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த விரும்பத்தகாத ஒருவர்.
இறுதிப் போர்க்காலத்தில் ஊடகங்களை உன்னிப்பாக கண்காணித்தவர்களுக்கு இந்தச் செய்தி புதிதல்ல.
இறுதிப் போரின் போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அரசுக்கு அனுசரனையாக இருந்தவர்.
இறுதிப் போர்க்காலத்தில் இராமலிங்கம் சந்திரசேகரன் என்ன செய்தார், என்ன கதைத்தார் என்பதை மீள திரும்பிப்பார்த்தால் தமிழர்கள் இராமலிங்கம் சந்திரசேகரனின் முகத்தை கூட திரும்பிப்பார்க்க மாட்டார்கள். இனப்படுகொலை யுத்தத்திற்கு முழுமயான ஒத்துழைப்பை வழங்கிய ஜேவி.பி இன் முக்கிய உறுப்பினர். அதற்கு அப்பால் சந்திரசேகரின் நாசகார பணி பல மடங்கு பாரதூரமானது.
சந்திசேகரன் ஒரு தமிழன். அவரை ஒரு தமிழன் என்று சொல்லவே வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. இறுதிப் போர் நடந்த காலத்தில் இராமலிங்கம் சந்திரசேகரன் யுத்தத்தை முன்னெடுத்த மகிந்த அரசின் ஒரு பங்குதாரராக இருந்தவர். கொடூர யுத்தத்தினை மகிந்த அரசு முன்னெடுக்க வேண்டிய அனைத்து பாராளுமன்ற அங்கீகாரங்களையும் வழங்கும் அமர்வுகளில் கலந்துகொண்டு அவற்றிற்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தவர். சந்திரசேகரன் ஜே.வி.பியின் ஊடக பேச்சாளராக இருந்து அரசின் இன அழிப்பு செயற்பாடுகளை முழுமையாக மூடிமறைக்கும் பணியை திறம்பட செய்தவர்.
அழிவுகரமான இன அழிப்புப்போருக்கு ஜே.வி.பி முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது என்பது தற்போதைய இளம் தலைமுறையினருக்கு தெரியாமலிருக்கலாம். தமிழ்மக்கள் இறுதிப் போரின் போது கொத்துக்கொத்தாக் கொன்றொழிக்கப்பட்டபோது பல்லாயிரம் மக்கள் உணவில்லாமல் பட்டினிகிடந்து இறந்து தொலைந்த போது பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் சிங்கள இராணுவத்தின் எறிகணைகளாலும், விமானத்தாக்குதல்களாலும், துப்பாக்கிச்சூட்டினாலும் காயமடைந்து உடல் அவயவங்கள் சிதறி சிகிச்சை பெறமுடியாமல் துடிதுடித்தபோது இந்தக் கொடூர சம்பவங்கள் பற்றி இந்த இராமலிங்கம் சந்திரசேகரன் எப்படி நியாயப்படுத்தினார் என்பதனை எங்கள் இளைய தலைமுறை தெரியாமலிருக்க கூடும்.
இராமலிங்கம் சந்திரசேகரன் ஓயாமல் அரச ஊடகங்களிலும், தனியார் தொலைக்காட்சிகளிலும், பி.பி.சி போன்ற சர்வதேச ஊடகங்களிலும் கொலைகளை நியாயப்படுத்திக்கொண்டிருந்தார்.
எப்படி நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் என்பது தான் முக்கியம்.
இந்த செய்தியில் நம்பிக்கை ஈனம் இருந்தால் நீங்கள் 2005 இல் இருந்து 2009 வரையான ஊடங்களில் சந்திரசேகரன் விடுத்த அறிக்கைகளை நேர்முகங்களை திருப்பிப்பார்த்தால் உண்மை புரியும். மக்கள் கொத்துக்கொத்தாக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது ஊடகங்களில் அத்தகவல்கள் வந்தால் அன்றைய தினம் அல்லது மறுதினம் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடகங்களில் தோன்றி சொல்லுவார் கொல்லப்பட்டடது பொதுமக்கள் அல்ல அவை பயங்கரவாதிகள் என்று. இறுதிப் போரில் நடந்த அத்தனை படுகொலை சம்பங்களையும் மூடிமறைத்து கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிப்பயங்கரவாதிகள் தான் என்று மிக அமைதியாகவும், நிதானமாகவும் கூறிவந்தார்.
அரசும் இந்த படுகொலை தொடர்பான உண்மைகளை மூடிமறைக்க சந்திரசேகரனை பயன்படுத்தியது. காரணம் ஒரு தமிழன் தன்னினம் படுகொலை செய்யப்படும் போது அதை மறைக்க மாட்டான் ஆகவே சந்திரசேகரன் சொல்வது உண்மை என வெளியுலகம் நம்பும் என்ற ஒரு தந்திரத்தில் சந்திரசேகரன் படுகொலை சம்பவங்களை மூடி மறைக்க பயன்படுத்தப்பட்டார். படுகொலைச்சம்பவங்களை, மக்கள் படும் துன்பங்களை மூடிமறைத்து அரசைப்பாதுகாத்து அரச தமிழின படுகொலையை தொடர்ந்து முன்னெடுக்க அவர் தன்னால் ஆனவரை பங்களித்திருந்தார்.
மக்கள் உண்ண உணவின்றி பட்டினியால் துடிக்கிறார்கள் என்ற செய்தி வந்த போது சந்திரசேகரன் ஊடகங்களில் தோன்றி மக்கள் பட்டினியில் இருக்கின்றார்கள் என்ற தகவல் உண்மையல்ல எனவும் 50,000 குறைவான எண்ணிக்கையான மக்களே புலிகளில் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு தேவையான அளவு உணவு அனுப்பப்பட்டுவிட்டது ஆகவே மக்கள் பட்டினி கிடக்கின்றார்கள் என்ற தகவலில் உண்மையில்லை என வாதிட்டு அந்த தகவல்களை பொய்யானதென பல தடவை கூறியிருக்கிறார்.
அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் 450,000 வரையான மக்கள் இருந்தமை பின்னர் முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வைத்து ஐ.நா கணித்துக் கூறியிருந்தமை தெரிந்தது .
மக்கள் காயமுற்று குற்றுயிரும் குலையுயிருமாக துடிக்கிறார்கள் என்று தகவல்கள் வந்தபோதெல்லாம் சந்திரசேகரன் அதெல்லாம் பயங்கரவாதிகள் தான் பொதுமக்கள் அல்ல என நடந்த கொடுமைகளை மூடிமறைத்து பெரும் தமிழினப்படுகொலையை மகிந்த அரசு முன்னெடுக்க உறுதுணையாயிருந்தவர். இன்றும் கூட சந்திரசேகரனின் குரலைக் கேட்டால் நினைவுக்கு வருவது படுகொலைகள் நடந்த போது மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்த போது அவற்றை மூடிமறைத்த சந்திரசேகரனின் கருத்துக்கள். அவை சிங்கள இராணுவத்தின் கொடுமையான ஆயுதங்களை விட பயங்கரமாக குரூரமான கருத்துக்கள்.
பொதுவாக நோக்கும் போது பொது மக்களைக் கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் கொலைக்குற்றத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத கொலைக்குற்றத்தினைப் புரிந்த ஒருவர் இனப்படுகொலையின் பங்குதாரர். சந்திரசேகரன் சாதாரணமான ஜே.வி.பி யினுடைய உறுப்பினர் மட்டுமல்ல. அவர் ஒரு தமிழ் தாயின் வயிற்றில் பிறந்த விரும்பத்தகாத ஒருவர்.