தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பதில் சொல்ல ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு நடக்கின்ற விஷயங்களை பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவிக்கிறார் என்றும் அதுபோல் ஏன் தமிழக ஆளுநர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. திமுகவின் வண்டவாளம், தண்டவாளம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக்கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு. காரணம் என்னவென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது..
ஆளுநர் திமுகவை அட்டாக் செய்துதான் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆளுநர் அவருடைய கடமையை மட்டும் தான் செய்யனும். மிகவும் தேவையான காலக்கட்டத்தில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ஒரு வருசத்திற்கு ஒரு முறை, ஆளுநர் பார்த்தீர்கள் என்றால், பத்திரிக்கையில் இன்டர்வியூ கொடுப்பாங்க அதுவும் பத்திரிக்கை பார்மெட்டில் தான்… அப்படித்தான் இத்தனை காலமாக ஆளுநர் இருந்திருக்கிறார்கள்.அப்படித்தான் இருக்கனும், மற்ற ஆளுநர்களை பற்றி நாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆளுநர் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று தமிழகத்தில் நிறைய கட்சி நண்பர்களே கேட்கிறார்கள்.. என்னை பொறுத்தவரை இது ஒரு தப்பான மரபை செட் செய்து விடும். ஆளுநர் என்பவர் அரசை விமர்சிக்க தொடங்கினால்.. உண்மையில் திமுக தப்பு பண்ணிடுச்சு அப்படீன்னா, பாஜக விமர்சிப்பது வேறு.. ஆளுநர் விமர்சிப்பது வேறு.. ஆளுநர் நேர்மையான முறையில் விமர்சிக்கவேண்டியது சட்டசபையில்தான். சட்டசபையில் விமர்சித்துக் கொள்ளலாம். ஆளுநர் என்பவர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கலாம். ஆனால் ஆளுநர் தினம் தினம் என்னை போல சந்தித்து பேட்டி கொடுத்தால், அந்த பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட, ஆளும் கட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.. விமர்சனத்தை நாங்கள் வைக்கிறோம். எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஆளுநர் வைத்தால் மரபு சரியாக இருக்காது. எங்களுக்கு லாபம் என்றாலும் அது வேண்டாம்.. தவறான முன்னுதாரணத்தை செட் செய்யக்கூடாது” இவ்வாறு அண்ணாமலை கூறினார். மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கீழ் பகுதியில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதல் பாஜக தெளிவாக உள்ளது. பாஜகவின் நிலைப்பாடும் அதுதான். காவிரியில் இந்த முறை நீர் திறக்கப்படாது என்று கர்நாடகா காங்கிரஸ் அரசு தெரிவித்துள்ளது. நீர்திறக்கப்படாவிட்டால் இந்த வருடம் எப்படி காவிரி டெல்டாவில் சாகுபடி நடைபெறும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.