ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி ஜன பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.
பதவி விலகல் செய்தாலும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட மன விரக்தியே தனது பதவி விலக காரணம் என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் Samagi Jana Balawegaya (SJB) செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்வரும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை சஜித் தொடர்பில் விசனமடைந்துள்ளதால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நேற்று அறிவித்துள்ளார்.
வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணிநேரத்துக்குள் வேறு ஒருவரை கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்க சஜித் நடவடிக்கை எடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் ரணிலுக்காகவும் வேலை செய்த ஒருவரை அவ்வாறு நியமித்துள்ளார். இதனால் நான் மிகவும் விரக்தியடைந்துள்ளேன் என அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் தான் இல்லாத காரணத்தால் தனக்கு வாக்களிக்க வேண்டாமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.