குருந்தூர் மலையில் நீதிபதி முன்னிலையிலேயே பௌத்த பிக்குகள் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். சரத் வீரசேகர தலைமையிலேயே குறித்த பௌத்த பிக்குகள் குழு சென்றிருக்கின்றது. சரத் வீரசேகர தொடர்ந்தும் இனமுறுகல்களை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றார். சரத் வீரசேகர போன்றவர்களின் பிரச்னை ஒன்றுதான் – அதாவது அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றிபெறுவது சரத் வீரசேகர போன்றவர்களிடம் நாட்டு மக்களுக்கு சொல்வதற்கு திட்டங்கள் இல்லை. இனவாதம் மட்டும்தான் அவர்களிடம் உண்டு. ராஜபக்ஸவின் வீழ்ச்சியை தொடர்ந்து தெற்கில் செல்லாக்காசாகிப்போன சரத் வீரசேகர போன்றவர்கள் வடக்கில் பௌத்தத்துக்கு ஆபத்தென்னும்பூச்சாண்டியை காண்பித்து தென்னிலங்கையில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றனர்.
இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அமைதி காப்பதுதான் பிரச்னையானது. ஏனெனில் இவ்வாறான செயல்பாடுகள் தொடர்ந்தும் இனவிரோத மனோநிலையை மக்கள் மத்தியில் பாதுகாப்பதற்கே பயன்படும். இதிலுள்ள முரண்பாடான விடயம் – ரணில்தலைமையிலான அரசாங்கம் தென்னாபிரிக்க வகையிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பில் பேசிவருகின்றது. இவ்வாறான சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?
நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு முன்னர் முதலில் அடிப்படையான விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதில் முதன்மையானது வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகளை விரிவாக்குதல் என்னும் பெயரில் இடம்பெறும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். தென்னிலங்கையிலிருந்து அரசியல்வாதிகள் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெக்கும்போது அதனை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறை தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். அவ்வாறில்லாது ஒருபுறம் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்வதாக கூறிக் கொண்டு மறுபுறம் அதற்கு முற்றிலும் மாறாக செயல்படுவதானது ஒருபோதும் நல்லிணக்கத்துக்கு வழிசமைக்காது. பௌத்த மயமாக்கல் தொடர்பில் தமிழ் மக்கள் அச்சத்தோடு நோக்குகின்றனர்.
பௌத்த விகாரைகளை தமிழ் அரசியல் தரப்புகள் எதிர்க்கவில்லை – ஆனால் பௌத்த மயமாக்கலையே எதிர்க்கின்றனர். பௌத்தர்கள் வாழ்கின்ற இடங்களில் பௌத்த விகாரைகள் நிறுவப்படுவதையோ அல்லது பௌத்த பிக்குகள் அவர்களின் மத செயல்பாடுகளை முன்னெடுப்பதையோ எவரும் எதிர்க்கவில்லை – மாறாக தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவி அதற்கான பக்தர்களை பேருந்துகளில் கொண்டுவருவதையே மக்கள் எதிர்க்கின்றனர். இதனை அரசாங்கம் மட்டுமல்ல பௌத்த மதபீடங்களும் புரிந்துகொள்ள வேண்டும். நல்லிணக்கத்தின் அடிப்படை ஒருவர் மற்றவரைப்பார்த்து அச்சப்படுதாக இருக்க முடியாது. அவ்வாறானதொரு சூழல் இருக்கும் வரையில் நல்லிணக்கம் என்பது கானல்நீராகவே இருக்கும்.