போதைப்பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சமூக விரோத செயல்களை தடுக்குமாறு அரசாங்கத்தைக்கோரி துவிச்சக்கர வண்டியில் கொழும்பிற்கு சவாரி செய்த மட்டக்களப்பு – காத்தான்குடி சிறுமியின் பயணம் முடிவடைந்தது.
இவருக்கு ஏறாவூர்ப்பிரதேசத்தில் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வரவேற்பளிக்கப்பட்டதுடன் பாராட்டி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 9 வகுப்பில் கல்விபயிலும் பாத்திமா நதா என்ற இந்த மாணவி கடந்தவாரம் காத்தான்குடியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் கொழும்பு நோக்கிப்பயணத்தை ஆரம்பித்து ஐந்து நாட்களில் கொழும்பிற்குச் சென்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரிடம் மகஜர் கையளித்தார்.
இவர் மீண்டும் காத்தான்குடிக்குச் செல்லும் வழியில் ஏறாவூர்ப் பிரதேசத்தில் பாராட்டு வைபவம் நடைபெற்றது.
ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் பாறூக் தலைமையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏசிஎம். நஜிமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட இச்சிறுமிக்கு நினைவுச்சின்னமும் கையளிக்கப்பட்டது.
இங்கு ஏற்புரை நிகழ்த்திய பாத்திமா நதா – அரசாங்கத்திடம் தனது கோரிக்கையை கையளித்ததையடுத்து அரசாங்கம் இதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை சமுதாயத்திற்கான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். சமூகத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டவர்கள் இன்றுடன் அவ்வாறான சமூக விரோத செயல்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.