கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவானது இன்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றத்ததால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் கடந்த (08) ஆம் திகதியன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
மேலும், நீதிமன்றத்திற்கு அறிவிக்காமல் உபுல் தரங்க வெளிநாடு சென்ற காரணத்தினால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவர் வெளிநாட்டில் உள்ளதால், நாடு திரும்பிய பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாவதாக சீராக்கல் மனு ஊடாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது.
கண்டியில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் போட்டித் தொடர் மேட்ச் பிக்சிங் வழக்கில் கடந்த (8) ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காகவே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி, உபுல் தரங்க சமர்ப்பித்த ரிட் மனுவை பரிசீலிக்கப்பட்டது.
பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லஃபர் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன், குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் மற்றும் விளையாட்டு ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு, மனுதாரர் .உபுல் தரங்கவை கைது செய்ய வேண்டாம் என மற்றுமொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.