முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது பெயருடன் வெளியிடப்பட்ட அவதூறுச் செய்தி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொலிஸ் சைபர் கிரைம் பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்தியாவின் மஹாராஷ்டிரா வங்கிக் கிளை தலைவரை இளைஞன் ஒருவர் தாக்கிய வீடியோ ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் அரச உத்தியோகத்தரை தாக்கியதாக இணையதளங்களில் பரவலாக பரவி வரும் நிலையிலேயே இது தொடர்பாக அங்கஜன் இராமநாதன் தெளிவூட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வங்கிக் கிளை தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றது. ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கத்தின் இளைஞர் பிரிவுத் தலைவரே வங்கி கிளைத் தலைவரை தாக்கியுள்ளார்.
ஆனால் இணையத்தளங்களில் அங்கஜன் எம்.பி அரச உத்தியோகத்தரை தாக்கினார் என பொய்யாக பகிரப்படுகின்றது.
தோல்வியின் பயத்தில் உள்ளோரே இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.