தமிழ் தேசிய அரசியலில் பலவாறான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான விவாதங்களின் பெரும்பாலானவை சமூக ஊடக விவாதங்களாகும். இவ்வாறான விவாதங்கள் ஒரு போதும் செயலாக
உருமாற முடியாதவை. இலங்கையின் தேசியவாத அரசியல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஒரு முறை கூறியது சரிதானோ – என்று எண்ணக் கூடியளவிற்கே நிலைமைகள் காணப்படுகின்றன.
அதாவதுசிங்கள தேசியவாதம் கிராமங்களுக்குள் இருக்கின்றது – தமிழ் தேசியம் சைபர் தளத்திலிருக்கின்றதென்று ரணில் ஒரு முறை கூறியிருந்தார். ரணில் விடயங்களை சரியாக புரிந்திருப்பதால்தான் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியாக வரவேண்டுமென்று கூறுகின்றாரோ. – ஏனெனில் தமிழ் தேசியமென்னும் சொல்லின் கீழ் தமிழ் கட்சிகள் ஒன்றுபட வில்லை. தமிழர்கள் ஒரு தேசமாக இருக்கின்றார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பனையென்று எண்ணக் கூடியளவிற்கே நிலைமைகள் சீரழிந்து செல்கின்றன. வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இப் போதும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகள் என்போரும் பேசிவருகின்றனர்.ஆனால் நடைமுறையில் நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறியிருக்கின்றது. அதன் சாத்தியத்தன்மை தொடர்பில் எவருமே நமபிக்கையுடன் நோக்கவில்லை. கிழக்கில் அவ்வாறான உரையாடலே இல்லை. மாறாகஅதனை எதிர்க்கும் தரப்புக்கள் தமிழ் மக்கள் மத்தியிலேயே பலமடைந்து வருகின்றன.
அதேவேளை வடக்கு மாகாணத்திலும் அரசாங்க ஆதரவு தமிழ் கட்சிகளில் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது.இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அதனை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் இந்த நிலைமைகளை எவருமே ஆழமாக நோக்குவதாக தெரியவில்லை. தொடர்ந்தும் வசதியுள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவது பற்றியே சிந்திக்கின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில் தேசம் – தேசியமென்று கூறிக்கொண்டுää தொடர்ந்தும் அரசியல்யதார்த்தங்களை உணர மறுப்பது எவ்வாறு சரியானதொரு அணுகுமுறையாக இருக்க முடியும்? இது தொடர்பில் தமிழ் சமூகம் சிந்திக்க முன்வராதா?
தமிழ் தேசிய அரசியலின் உண்மையான நிலைமை – கிட்டத்தட்ட கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. மேடை பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் கருத்துருவாக்கமென்னும் பெயரிலான எழுத்துக்களிலும் முகநூல்களிலும் – அதிலும் அதிகம் உண்மையான முகத்தை காட்டாத முகநூல்கள் – நினைவுகூர்தல் நிகழ்வுகளிலும்தான் இப்போது தமிழ் தேசியம் வாழ்கின்றதே தவிர தமிழ் தேசிய அரசியலுக்கான செயற்பாட்டு தளம் முற்றிலுமாக இழக்கப்பட்டுவிட்டது. தமிழ் தேசியம் பேசுகின்ற அல்லது
தமிழ் தேசியத்தை பெயரில் வைத்திருக்கின்ற அனைத்து கட்சிகளுமே அடுத்த தேர்தல் வெற்றியை இலக்கு வைத்திருக்கும் கட்சிகளாகும். தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை தாண்டிய அரசியலைப்பற்றி அவர்களால் கற்பனைகூடச் செய்ய முடியாது.
ஏனெனில் இந்த அரசியல் ஆட்டத்தில் பாராளுமன்ற உறுப்புரிமை ஒன்றுதான் அவர்களது அரசியல் அடையாளமாகும். எனவேதான் தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து மட்டுமே கட்சிகள் செயற்படுகின்றன. இந்த இலக்கிற்காக ஒவ்வொருவரும் வேறுபட்ட சுலோகங்களை உச்சரிக்கலாம்.
ஒருவர் சமஷ்டி எனலாம் – இன்னொருவர் ஒரு நாடு இரண்டு தேசமெனலாம் இன்னொருவர் 13 ஐ ஆரம்பப்புள்ளியாக எடுக்கலாம் ஆனால் அது ஒரு இறுதித் தீர்வல்லவென்று கூறலாம். ஆனால் நீங்கள் முன்வைக்கும் நிலைப்பாடுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பது எவ்வாறென்று கேட்டால் எவரிடமும்பதிலில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால் கடந்த 74 வருடகால அரசியலில் – நீங்கள் கூறுவதை எவ்வாறு அடையப் போகின்றீர்கள் என்னும் கேள்விக்கு தெளிவான உறுதியான பதிலோடு இருந்தவர் பிரபாகரன் மட்டுத்தான்.
இன்றைய சூழலில் அரசியலை கையாளப் போவதாக கூறுபவர்கள் முதலில் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதனை மறுத்துச் செல்வது இலகுவானது – ஆனால் அரசியலில் மக்களுக்கு சாதகமாக எதுவும் நிகழாது. தமிழர் அரசியலானது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக – இறுதியில் கட்டெறும்பும் கண்ணுக்கும் தெரியாத நிலைமையே உருவாகும்.