இறக்குமதி செய்யப்படும் ஐந்து பண்டங்களுக்கு வரி விதித்து 2023.10.13ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வர்த்தமானி எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு புதிதாக விசேட வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் பிரகாரம் 2024.10.14ஆம் திகதியன்று 2406\02 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 5 பண்டங்களுக்காக வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியமானதாகும்.
2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பண்ட வரி சட்டத்தின் 2ஆவது பிரிவின் பிரகாரம் வரி விதிப்பதற்கான பணிப்பில் பிரதானமாக உரிய பண்டங்கள் குறிப்பாக சுங்க செயற்பாடுகளுடன் தொடர்புடைய வரி வீதங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த பணிப்பு அமுல்படுத்தப்படும் உரிய காலப்பரப்பு, உரிய பணிப்புக்காக 3 பிரதான சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த சட்டங்களின் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் ஐந்து பண்டங்களுக்காக விசேட பண்ட வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டிருந்த 2023 ஒக்டோபர் 14 ஆம் திகதியன்று இலக்க 2353/77 என்ற வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் 2024.10.13ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. ஆகவே அந்த வர்த்தமானியின் செல்லுபடி காலத்தை 2024.12.31ஆம் திகதி வரை நீட்டிப்பதற்காக 2024.10.14ஆம் திகதியன்று இலக்கம் 2406/02 என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டது.
ஆகவே இறக்குமதி செய்யப்படும் பண்டங்களுக்கு விசேட வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இறக்குமதி செய்யப்படும் பருப்புக்காக விதிக்கப்பட்டிருந்த 25 சதம் வரி தொடர்ந்து அமுலில் இருக்கும். தேசிய கடற்றொழில் கைத்தொழில் மற்றும் பழவகைகள் உற்பத்தியை பாதுகாக்கும் நோக்கில் மற்றும் வெளிநாட்டு கையிறுப்பினை கருத்திற் கொண்டு ஏனைய 4 பண்டங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரி வீதம் தொடர்ந்து பேணப்படும்.
பொதுவாக இந்த சட்டத்தின் பிரகாரம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் ஒரு வருடகாலத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரி தொடர்பில் முறையாக அவதானம் செலுத்தப்பட்டு வர்த்தமானியின் செல்லுபடியாகும் காலம் மாத்திரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.