தமிழ் மக்களுக்கு மைதானம் அமைப்பது, வீதி அமைப்பது அபிவிருத்தி அல்ல தமிழருக்கு தேவை தனிமனித அபிவிருத்தி அதைவிடுத்து அபிவிருத்தி என்ற போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். எனவே சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாங்கள் சுயேச்சை குழுவாக இந்த பாதையை தெரிவு செய்து களம் இறங்கியுள்ளோம். என சுயேச்சைகுழு 4 இலக்கத்தில் தையல் இயந்திரம் சின்னத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் சகாதேவன் அருள் தாசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
இந்த தேர்தலில் ஒரு வெற்றிக்கனியை ஏற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எங்களுடைய மக்களுக்கு நாங்கள் சரியான பாதையை கட்டமைத்து தருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. நீங்கள் எதிர்பார்க்கலாம் நாங்கள் சுயேச்சை குழுவாக இருக்கின்ற காரணத்தினால் யாரிடமாவது பணத்தை வாங்கிக் கொண்டு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்று நினைக்கலாம். நாங்கள் அப்படியல்ல கிட்டத்தட்ட 14 வருடமாக ஒரு ஆய்வு செய்தோம். அந்த ஆய்விலேயே எங்களுடைய மக்களுக்கான சரியான பாதை இல்லை என்று தெரிய வந்தது, அதன் காரணமாக தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
உண்மையிலேயே அபிவிருத்தி என்று சொன்னால் ஒன்று பாதை அபிவிருத்தி அப்படி இல்லையென்றால் கட்டட அபிவிருத்தி மைதானங்களை அமைப்பது என்ற போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுவது போன்ற அபிவிருத்தியை தான் இந்த அரசாங்கத்தோடு சேர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.
பாதை அமைப்பது கட்டிடம் அமைப்பது அபிவிருத்தி அல்ல தங்களது வயிற்று பிழைப்புக்காக செய்து கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் சிந்தியுங்கள் அதேவேளை தேசியம் என்ற போர்வையில் எமது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு நாங்கள் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றோம்
இந்த தேசிய கட்டமைப்பை எவ்வாறு உருவாக்கப் போகின்றார்கள். தேசியம் என்பது ஒரு மொழியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது கலை கலாச்சாரம் கல்வி அனைத்தும் இணைந்ததுதான் தேசியம். அதை விட்டு தேசியம் என மக்களை ஏமாற்றவேண்டாம்.
தேசிய கட்சிகளுடன் இணைந்து ஏன் பயணிக்க முடியவில்லை எந்த ஒரு அரசாங்கத்திற்கு அதிகாரத்தை கொடுக்க முடியாது தங்களுடைய மக்களின் சொந்த விருப்பு வாக்கின் அடிப்படையில் ஒரு அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலமாக பாராளுமன்றத்தை அலங்கரிப்பது எங்களுக்கு சிறப்பாக இருக்கும். நாங்கள் புது முகங்களாக இருந்தாலும் நிறைய சிந்தனைகளோடு நிறைய தத்துவங்களோடு உங்களுக்கான பாதையை வழிகாட்டுவதற்காக நாங்கள் இந்த காலத்தில் களமிறங்கி இருக்கின்றோம் என்றார்.