லலித் குமார் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரு அரசியல் செயற்பாட்டர்களும் கடத்தப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று உயர் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்படி யுத்த காலத்தின் பின்னர் நபர்களை காணாமலாக்கள் தொடர்பிலான வழக்கொன்றில் சாட்சியாளராக வேண்டிய நிலை முதன்முதலாக ஒரு ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யுத்த நிலைமையின் போது காணாமல் போன நபர்களை கண்டுபிடிகுமாறு வற்புறுத்தி 2011 செப்டம்பர் மாதம் 09ம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
வாகனமொன்றில் வந்த சிலர் இவர்களை கடத்திச் சென்றதாக பின்னர் தெரிய வந்தது. அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கில் கோப்பாய் காவல் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் போது மேற்படி வழக்கு சம்பந்தமாக அனுப்பப்பட்ட அழைப்பாணையின்படி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் காணாமல் போனது தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியாளர்களில் ஒருவராக அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
தனக்கும் அந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை எனக் கூறி சாட்சியமளிப்பதை நிராகரித்திருந்தார். என்றாலும் 2019 செப்டம்பர் 27ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குறிப்பிட்டு யாழ் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. எவ்வாறாயினும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும் அதனால் யாழ்.நீதவானின் தீர்ப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தபோது கோட்டாபய ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதால் அவரை சாட்சியமளிக்க அழைக்க முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், தற்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இல்லாததால் அவரை சாட்சியமளிக்க அழைக்க முடியும் எனவும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ச சாட்சியமளிக்கத் தயார் என உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இதன்படி யாழ் நீதிமன்றில் சாட்சியமளிக்காமல் வேறு நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்க முடியும். என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கில் மேலும் 53 காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் விசாரிக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் அதியுயர் பொறுப்பதிகாரி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ச பதில் சொல்ல நேரிடும். லலித் குகன் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்களான நுவான் போபகே மற்றும் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ரொமேஷ் டி சில்வா ஆஜரானார்.