நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதன் சூத்திரதாரிகள் தற்போது எங்களுக்கு முன்னாலே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். என முன்னாள் பிரதியமைச்சரும் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மன் ) கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தேர்தல் காரியாலய நிகழ்வு முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் இன்று கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பகுதியில் இடம்பெற்றது.
கட்சியின் தேர்தல் காரியாலயம் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது விநாயகமூர்த்தி முரளிதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தேசிய ஜனநாயக முன்னணியில் இரண்டு பெண் வேட்பாளர்கள் உட்பட 8 தமிழ் வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் இரண்டு முறை நான் பாராளுமன்றத்தில் இருந்திருக்கின்றேன். பல வேலை திட்டங்களை செய்து இருக்கின்றோம். கோடிக்கணக்கான நிதியினை செலவழித்து இருக்கின்றோம். எவருமே கருணா அம்மான் என்கின்ற பெயருக்கு ஊழல் குற்றச்சாட்டு எந்த குற்றச்சாட்டும் செலுத்த முடியாது. மண் பர்மிட், பார் லைசன்ஸ் நாங்கள் எடுத்த சரித்திரமே இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களை கடந்த காலங்களில் ஏமாற்றி ஏமாற்றி தற்போது சம்பந்தன் ஐயாவின் மறைவுக்கு பின்னர் சிதறுண்டு காணப்படுகின்றது. அத்தோடு பணத்துக்கு ஆசைப்பட்டு பதவிக்கு ஆசைப்பட்டு சிதறுண்டு காணப்படுகின்றது.
ஜனா அண்ணன் கூறுகின்றார் ”சாணக்கியன் 60 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்று இருக்கின்றார்” என்று உண்மையான விடயம் அதே சமயம் சாணக்கியன் கூறுகின்றார் ”ஜனா அவர்கள் பல்லாயிரக்கணக்கான சொத்துக்களை குவித்திருக்கின்றார்” என்று. அதுவும் உண்மையான விடயம் ஆகவே அதே போன்று உங்களுக்கு தெரியும் ஏனைய கட்சியினர் இன்று 588 கோடி ரூபாய் ஊழலினை செய்த கட்சியும் தற்போது போட்டியிடுகின்றது. இவர்கள் எல்லாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய தேவையில் இருக்கின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர வர வேண்டும் என்பதற்காக நாங்கள் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றோம். என்ன காரணம் என்றால் சிங்கள உறுப்பினர் தான் ஜனாதிபதியாக இந்த நாட்டிலே வருவார். அவர் ஒரு நல்லவராக இருக்க வேண்டும். ஊழல் அற்றவராக இருக்க வேண்டும். என்பதற்காக மதிப்பிற்குரிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரவு வழங்கியிருந்தோம்.
ஆனால் அவருடைய நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால் ஊழலை முற்றாக ஒழிப்பேன். உடனடியாக விசாரிப்பேன் கைது செய்வேன் என்று எல்லாம் கூறியிருக்கின்றார். உண்மையில் அவை அனைத்தும் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். என்பதனை இவ்விடத்தில் ஜனாதிபதியிடம் கூற விரும்புகின்றேன்.
ஏனென்றால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதன் சூத்திரதாரிகள் தற்போதும் எங்களுக்கு முன்னாலே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் 24 குழந்தைகள் பச்சிளம் சிறார்கள் மரணம் அடைந்தார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் இன்று ஒரு சிறந்த தலைமைத்துவத்தை தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும். என்பதற்காக தற்போது நாங்கள் வந்திருக்கின்றோம்.
கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும் மட்டக்களப்பில் ஊழல் என்பது தான் மேலோங்கி இருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஏனென்றால் உங்களுக்கு தெரியும் கொக்கட்டிச்சோலை பிரதேச மக்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் மண்முனை பாலத்தை அவர்களுக்காக நான் கட்டி வைத்தேன். அது மாத்திரமல்ல பல திட்டங்களை நான் மக்களுக்காக செய்திருக்கின்றோம். மண்முனை பாலம் என்பது பாரிய சவாலாக இருந்த விடயம் அந்த விடயத்தைகூட நான் செய்து கொடுத்திருக்கின்றேன்.
இன்று வீதி அமைச்சர்கள் என்று இருந்தவர்கள் பட்டிப்பளை சந்தியில் இருந்து அம்பிளாந்துறை வீதியை பார்த்தால் உங்களுக்கு தெரியும். எதுவித புணரமைப்பும் இல்லாத நிலையில் காணப்படுகின்றது. அதேபோன்று மகிளடித்தீவு பண்டாரியாவெளி வீதிக்கு காங்கிரீட் பாதை போட்டு இருக்கின்றார்கள். அது தூள் தூளாக உடைந்து இருக்கின்றது. அதாவது கம்பி இல்லாத காங்கிரீட் வீதி எங்கு எல்லாம் கொள்ளையடிக்க இயலுமோ அங்கு எல்லாம் வீதி அமைத்திருக்கின்றார்கள். நகர் பகுதிகளில் காப்பட் வீதிகளுக்கு மேலாக காப்பட் போடுகின்றார்கள் ஏனென்றால் கொள்ளை அடிப்பதட்காக.
இவ்வாறு பல கொள்ளைகளை அடித்து மக்களின் பணத்தை சூறையாடி அது மாத்திரம் இல்லாமல் தற்பொழுது தேர்தலுக்காக கள்ள காசு கூட அடித்திருக்கின்றார்கள் அக்கரைப்பற்றில் உங்களுக்கு தெரியும் துண்டு பிரசுரங்கள் எடுப்பதற்காக கள்ள காசுடன் சென்று ரிஎம்விபி கட்சியினர் பிடிபட்டிருக்கின்றார்கள்.
மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது யார் தான் பணம் தந்தாலும் நீங்கள் வாங்க வேண்டாம் இதனால் உங்களுக்கும் பல ஆபத்துக்கள் காணப்படுகின்றது தேர்தலுக்காக பணம் தருகின்றோம் என்று கள்ள பணத்தினை கொடுக்கின்றார்கள். இது ஒரு பாரிய குற்றம் ஆகவே அந்த குற்றத்தில் நாங்கள் பங்காளிகளாக இருக்கக் கூடாது என்பதனை உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
உங்களுக்கு தெரியும் ஓட்டமாவடி நாவலடி பகுதியில் இருந்து புனானை வரை சென்று பார்த்தீர்கள் என்றால் அனைத்து அரச காணிகள் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்தெடுத்திருக்கின்றார்கள் குடியேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.இவற்றை தட்டி கேட்பதற்கு யாரும் இல்லை.
மயிலத்தமடு பிரச்சனை நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இந்த ஐந்து வருடங்களில் மேச்சல் தரை தொடர்பில் எது வித முன்னேற்றங்களும் இடம்பெறவில்லை. வந்தாறுமூலை, சித்தாண்டி மக்கள் பாரிய துன்பங்களை சந்திக்கின்றார்கள்.
ஆனால் இப்போது வந்து என்ன கூறுகிறார்கள் மேய்ச்சல் தரை பிரச்சனையை முடித்து தருவோம் என கூறுகின்றார்கள். இந்த ஐந்து வருடத்தில் முடிக்காத மேய்ச்சல் தரை பிரச்சனை இவர்கள் முடிப்பார்களா? அது கடைசி வரையும் இடம் பெறாது. அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் நிச்சயமாக விழிப்படைய வேண்டும். நாங்கள் வருகின்ற போது அதனை நிறைவேற்றி தருவோம். அதேபோன்று கித்துள் உருகாம திட்டம் என்னால் முன்னெடுக்கப்பட்டது. பாரிய திட்டம் அதுவும் இன்னமும் நிறைவு பெறாமல் இருக்கின்றது. அதையும் முடித்து கொடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்.
ஆகவே ஊழல் அற்ற நிர்வாகத்தை நாங்கள் கொண்டு வர வேண்டும் அதைத்தான் உங்களிடம் நாங்கள் அன்பாக கேட்கின்றோம் எங்கள் கரம் சுத்தமானது. எதுவித ஊழலோ லஞ்சமோ செய்யாமல் நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். சிறந்த நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.
உண்மையில் வீடு வீடு என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தவர்கள் அனைத்து இடங்களிலும் லஞ்சத்தை வாங்கி கொழும்பில் வீடு வேண்டுமா அல்லது வெளிநாட்டில் வீடு வேண்டுமா என்று வாங்கி இருக்கின்றார்கள் ஆனால் இங்கு வாக்களித்த மக்கள் வீடும் இல்லாமல் கதவும் இல்லாமல் இருக்கின்றார்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
தேசியம் தேசியம் என்றெல்லாம் வெறும் போலித்தனமாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆகவே இவர்கள் இலஞ்சமாக வேண்டிய பணத்தை மக்களுக்கு செலவழித்து இருந்தால் பாரிய வேலைத் திட்டங்களை முடித்திருக்கலாம்.