ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதிய விடயம் அம்பலமானதால் அப்பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மாணவியை பாலியல் ரீதியாக அதிபர் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் இதன்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
அந்த மாணவியும் இதற்கு முன்னர் அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதே அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதமும் தற்போது வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை அதிபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் செய்த பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அந்த அதிபர் அரசியல் பின்புலத்தை கொண்டிருப்பதால் பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
அதற்கு பொலிஸார், எவரும் முறைப்பாடு செய்யாத நிலையில் தம்மால் உடன் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த சில காலங்களாக ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளில் மாணவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை முக்கிய விடயமாகிறது.