நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON 2030 வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நிலையான நாட்டிற்கு ஒரே பாதை” என்ற தொனிப்பொருளில் இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் நாட்டில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப தரங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் கலைப் பட்டதாரிகளுக்கு ஆறு மாத தகவல் தொழில்நுட்பப் பாடநெறி அறிமுகப்படுத்துதல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குதல் என பல திட்டங்கள் காணப்படுவதாக கனக ஹேரத் குறிப்பிட்டார்.