முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் மீளப்பெற்றுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு இணங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதால், தமது கட்சிக்காரரால் முன்னைய விசாரணைக்கு முன்னிலையாக இயலவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த உண்மைகளை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கை சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராக கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சட்டத்தரணி வசிமுல் அக்ரம், நெரஞ்சன் இரியகொல்ல மற்றும் அஜித் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையாகினர்.