“கௌரவ”டக்ளஸ் தேவானந்தா”
2000 – 2005: வடக்கு மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு, விவசாய சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, தமிழ் மற்றும் இந்து விவகாரங்கள், தமிழ் மொழிப் பாடசாலைகள் மற்றும் வடக்கிற்கான தொழிற்பயிற்சி அமைச்சர் (ஜனாதிபதி: சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க)
2005 – 2010: சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமை அமைச்சர் (ஜனாதிபதி: மகிந்த ராஜபக்ச)
2010 – 2015: பாரம்பரிய தொழிற்துறை மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் (ஜனாதிபதி: மகிந்த ராஜபக்ச)
2018: மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் (ஜனாதிபதி: மைத்திரிபால சிறிசேன)
2019 – 2024: கடற்றொழில் அமைச்சர் (ஜனாதிபதி: கோட்டாபய ராஜபக்ச + ரணில் விக்கிரமசிங்க)
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அரசாங்கங்களில் பதவி வகித்தவர் டக்ளஸ் தேவானந்தா.
இறுதிக்கட்ட போரின் போது மக்கள் கொன்றொழிக்கப்படுவதனை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்காதது மட்டுமல்லாது, அக்கொலை முயற்சிக்கு துணை நின்றார். அதன் காரணமாகவே அவருக்கு மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவையிலும், கோட்டாபயவின் அமைச்சரவையிலும் அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்டது.
2018 இல் மகிந்த ராஜபக்ச சட்டவிரோதமாக, பிரதமராக நியமிக்கப்பட்ட குறுகிய காலப்பகுதியின் போது கூட ‘கௌரவ’ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்பட்டது. கோட்டபய நாட்டைவிட்டு ஓடிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோதும் கூட இவருக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்பட்டது.
இவர் சிங்கள பேரினவாதத்தின் விசுவாசமான தொண்டனாக தொடர்ந்து இருந்து வருவதன் மூலமாக தான் நாயிலும் நன்றி மிகுந்தவன் என்று 1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து நிரூபித்து வருகின்றார்.
கப்பலோட்டிய தமிழர்கள் மத்தியில், இவர் ஒரு கப்பம் வாங்குகின்ற தமிழர்.
கோவில்களுக்கும், ஏனைய பொது நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் தனக்கும் நிறைய நிதியினை ஒதுக்கிக்கொண்டவர்.
தீயிட்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தினை புதிதாக அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அழிந்திருந்த கட்டடத்தினைப் புதுப்பித்து, மீதமாகிய பணத்தினை தன்னுடைய சேமிப்புக்கு கணக்கில் சேர்த்துக்கொண்டவர்.
இவருடைய தம்பியார் இன்று சீன அரசாங்கத்தின் முதலீட்டுடன் கூடிய கடலட்டை பண்ணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி இயற்கை வளத்தினையும், நிலங்களையும் சூறையாடி, யாழ் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதில் அண்ணனுக்கு துணை நிற்கின்றார்.
தற்போது பூநகரியில் (Tokyo Cement) நிறுவனத்துடன் இணைந்து, மக்களின் விவசாய நிலங்களை சூறையாடியும், நன்னீர் வளத்தினை நாசம் செய்யும் விதமாகவும், சீமெந்து தொழிற்சாலையினை அமைப்பதற்கு துணை நிற்பதன் மூலம் தொழில்வாய்ப்புகளை பெருக்க அயராது உழைக்கிறார்.
ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகின்ற கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள், பல சமூக செயற்பாட்டாளர்களையும், ஊடகவியலாளர்களையும் தன்னுடைய முகாமில் விருந்தினர்களாக தங்கவைப்பதும் வழக்கம். உபசரிப்பில் மயங்காதவர்களுக்கு நிரந்தர ஓய்வுநிலை வழங்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
இத்தகைய பெருந்தகைக்கும், அவருக்கு வாய்க்குள் வராத ஆங்கிலத்தில் வக்காலத்து வாங்கி வாக்குசேகரிக்க முயல்பவர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்து, எம் உரிமைக்கான போராட்டத்தினை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.