கணினி சேவை நிறுவனமொன்றை நடத்தி, மூன்று கோடியே 36 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா வரியை அரசுக்கு செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வழக்கில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான ஜனக ரத்நாயக்கவையும் அவரது மனைவியையும் டிசம்பர் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க நேற்று (04) உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவி எச்.எல்.குமாரி டி சில்வா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 05 இல் Rent A கம்பனியின் (Rent A company service pvt ltd) பணிப்பாளர்களாகச் 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் செயற்பட்டு, 3 கோடியே 18 இலட்சத்து 46 ஆயிரத்து 248.24 ரூபா VAT வரியை செலுத்தத் தவறியதோடு, அந்த மூன்று ஆண்டுகளுக்கான 18 இலட்சத்து 51 ஆயிரத்து 688 ரூபா வருமான வரியையும் செலுத்தத் தவறியதாக ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவிக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.