எமது மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்தும் இன்னமும் எங்களுடைய பிரதேசம் புறக்கணிக்கப்பட்ட பிரதேசமாக இன்னமும் பாராபட்சம் காட்டப்படுகின்ற பிரதேசமாகவே இருந்து வருகின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் அ.கருணாகரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் அ.கருணாகரன் அவர்களின் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்கள் நேற்று (04) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றது. நேற்று (04) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய வேட்பாளர் அ.கருணாகரன்,
தமிழ் தேசியத்திற்காக நீண்ட காலமாக நாம் செய்து வந்த சேவைகளின் உடைய மறு ஒரு பரிமாணமாக நான் இன்று பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கி இருக்கின்றேன்.
2004 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒருங்கமைத்த காலப்பகுதியில் நமது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் அவர்கள் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகளில் எங்களுடைய அரசியல் கட்சியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விதமான மேடைகளில் ஏறி அரசியல் பேச்சுக்களை பேசி அந்த நேரத்தில் எங்களுடைய அரசியல் கட்சியில் நான் ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டேன்.
2004 ஆம் ஆண்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நான் 2024 ஆம் ஆண்டு ஒரு வேட்பாளராக உங்கள் முன் களமிரக்கப்பட்டுள்ளேன். மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தில் ஒரு மனிதவள உத்தியோகத்தராக செயற்பட்டு கொண்டு இருந்த இந்த சந்தர்ப்பத்தில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். புதிய முகம் தேவை அதுவும் போராட்ட வரலாற்றை பின்னணியைக் கொண்ட சோரம் போகாத ஒரு அரசியல் தலைமை ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். என்று பல சிந்தனையாளர்கள், விரிவுரையாளர்கள் எங்களுடைய பிரதேச அமைப்புகளை சேர்ந்தவர்கள் பரிந்துரைத்தனர்.
அதன் அடிப்படையில் பலருடைய பல சந்திப்புகளின் அடிப்படையில் நான் வேட்பாளராக களம்பிறக்கப்பட்டு இருக்கின்றேன். என்னுடைய குடும்பத்தில் எங்களுடைய விடுதலை போராட்டத்தில் என்னுடைய சகோதரர்களை என்னுடைய குடும்பம் தியாகம் செய்திருக்கின்றது. அதில் இருவர் வீரச்சாவை தழுவிக் கொண்டிருக்கின்றார்கள் ஒருவர் முன்னாள் போராளியாக இருந்து தற்போது எங்களுடைய கிராமத்தில் வசித்து வருகின்றார்.
இந்த ஒரு பின்னணியில் நான் இந்த இடத்தில் தெரிவு செய்யப்பட்டு களமிரக்கப்பட்டு இருக்கின்றேன் உண்மையில் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பல வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றார்கள், பலர் தெரிவு செய்யப்படுகின்றார்கள். தெரிவு செய்யப்பட்டாலும் கூட எங்களுடைய பிரதேசங்களை பொறுத்த அளவில் குறிப்பாக பின்தங்கிய கிராமங்களை பொறுத்தவரையில் வாகரை வெல்லாவெளி பட்டிப்பளை பிரதேசமாக இருக்கலாம் இவ்வாறாக பல பிரதேசங்களில் கூறினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றும் நிர்க்கதியான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
பல முன்னாள் போராளிகள் அங்கவீனமாகி எந்த ஒரு தொழில் முயற்சி இல்லாதவர்களாய் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று பல வரிய குடும்பங்கள் அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு நாளும் தாங்கள் வேலைக்கு சென்றால் தான் ஒருவேளை உணவு என்ற நிலையில் இருக்கின்றார்கள்.
அரசியல் என்பது மக்கள் சேவையாக நான் பார்க்கின்றேன். இந்த மக்கள் சேவையை ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் சரியாக செய்திருக்கின்றார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இதை அறிந்த எங்களுடைய ஆதரவாளர்களும் சரி என்னை களமிறங்கியவர்களும் சரி பின்தங்கிய மக்களை அவர்களுடைய வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்.