மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட சுமார் 2000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெல் வயல்கள் காட்டு வெள்ள நீர் நிரம்பி காணப்பட்டுள்ளன.
இந்த சூழலினால் குறித்த பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதனை பொது மக்கள் மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனரிடம் மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டி வெள்ள நீரை வெளியேற்றித்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதனை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் அதிகாரிகளை அனுப்பி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான விசேட கூட்டமொன்றும் மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டு ஆற்றுவாய் வெட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபையின் ஒத்துழைப்புடன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட கமத்தொழில் அதிகார சபையினரும் இணைந்து நேற்று சனிக்கிழமை (09) மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீர் வடிந்தோட செய்யப்பட்டது.