1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, ரோஹன் விஜேவீர உட்பட உயிரிழந்த உறுப்பினர்களுக்காக ஜே.வி.பி நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு முன்னிலை சோசலிசக் கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூல கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள, உயிர் நீத்த ஜே.வி.பி உறுப்பினர்களுக்கான நினைவேந்தல் முன்னதாக பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுக்கு அரச கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் சட்டவிரோத கொலைகளின் பின்னணியில் உள்ள உண்மைகளையும் வெளிப்படுத்துமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
கடந்த ஆணைக்குழுக்கள் அரசாங்கங்கள் ஊடாகவும் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, ஜே.வி.பியின் தலைவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள நிலையில், ரோஹன விஜேவீரவின் மரணம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விரிவான விசாரணைக்கு முன்னுரிமை வழங்குமாறு முன்னிலை சோசலிச கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.