தேசிய மக்கள் சக்தியின் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களாக இருக்கப்போகின்ற காரணத்தினால், அநுர, அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார் என்று சில தமிழர்கள் பதிவிடுவதனை பார்க்கக்கூடியவாறு உள்ளது. இது தேசிய அரசியலுக்கும், வடக்கு-கிழக்கினை மையப்படுத்திய தமிழ் தேசிய அரசியலுக்கும் உள்ள இடைவெளியினைக் காட்டுகிறது.
- தேசிய மக்கள் சக்தி என்ற போர்வைக்குள் மறைந்திருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணியினுள் உட்கட்சி சனநாயகம் என்பது அறவே கிடையாது. பாராளுமன்றம் செல்லுகின்ற தமிழர்களுக்கு, கட்சித் தலைமைக்கு அழுத்தத்தினையும் வழங்குவதற்கான வலு இருக்காது.
- தேசிய மக்கள் சக்தி என்பது 21 கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளின் கூட்டு. இதிலே சிங்களப் பேரினவாதக் கோட்பாட்டினைக் கடைப்பிடிப்பவை கணிசமானவை. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது தேசிய பிக்குகள் முன்னணி (National Bhikkhu Front). சுனாமிக்குப் பின்னரான செயல்பாட்டு மேலாண்மை (P-TOMS: Post-Tsunami Operational Management), 2002 சமாதானப் பேச்சுவார்த்தையின் போதான இடைக்கால அரசாங்கம் (ISGA: Interim Self Governing Authority) என்பவற்றை சட்ட ரீதியாகவும், போராட்டங்களை முன்னெடுத்தும் முன்னின்று எதிர்த்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரும், இந்த தேசிய பிக்குகள் முன்னணியினருமே. இதில் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. சந்திரசேகரன் பங்கேற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சிகள் இதற்கு சான்று. இவர்களுடைய கூட்டினைவோடு உருவாகியிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அவர்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தத்தினால் அதிகாரப்பகிர்வுடனான அரசியலமைப்பினை உருவாக்கும் எனக் கூறுவது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமானது என்ற கேள்வி இருக்கின்றது.
- இன்று அடித்துவரும் அநுர அலை 2019 ஆம் ஆண்டு அடித்த கோட்டாபய அலையிலிருந்து விலையேற்றம், அதிகரித்த வறுமை, நீண்ட வரிசைகள், வெறிச்சோடிய கடைகள், மின்வெட்டு போன்ற காரணங்களில் திசை மாறி அடிக்கின்றது. அவ்வளவு தான். திசைமாறி அடிப்பதனால் அலையிலிருக்கும் நீர் தூய்மையானது என நம்புவதெல்லாம் பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதாகச் கருதியதற்கு சமானம்.
- வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்ற போது கட்சித் தலைமை பிரதானமாகத் தகைமையினை விட கட்சித் தலைமையின் பேச்சினை, மீறாத தொண்டர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது என்ற கருத்தேற்புகள் கட்சியின் நீண்ட கால விசுவாசிகளுக்கு மத்தியில் காணப்படுகின்றது.
- ‘அநுர அலை’ அடிப்பதற்கான பிரதானமான காரணங்கள் பொருளாதார சரிவும், விலைவாசி ஏற்றமுமே. ஆனாலும் பொருளாதார சரிவு தொடர்பான தெளிவு அநுரவிற்கு வாக்களித்தவர்கள் உட்பட பல சாமானிய மக்களுக்கு இல்லை. அவர்களை அதிகம் கவர்ந்தது அநுர அறிவித்த இலவசங்களும், சம்பள அதிகரிப்புமே. இவர்கள் கூறுகின்ற ‘மாற்றம்’ எல்லாம் வெறும் வாக்குகளுக்கான சுலோகங்கள்.
- பதவிக்கு வருவதற்கு முன்னர் ‘தவறு’ என்று கூறி தேர்தல் பிரச்சாரம் செய்த அநுர, பதவிக்கு வந்த குறுகிய காலத்திலேயே அத் தவறுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கின்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். உதாரணம்: IMF நிபந்தனைகள் + கடன் மறுசீரமைப்பு, ஊழியர் சேம நிதியம் (EPF), PTA நீக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தமை, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான தேவை இருப்பதாக தாம் உணரவில்லை என அறிவித்தமை.
- இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் தேசியம் களையப்பட்டு விட்டதாக கட்சிப் பிரிவின்றி தெற்கு கொண்டாடுவதனையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது.