தமிழ் மக்களுக்கு பொருட்கள், பணம் கொடுத்து வாக்கு பெறுவதை ரிசாட் , மஸ்தான் நிறுத்த வேண்டும். ஆதாரங்கள் உள்ளன. நீதிமன்றம் வரை செல்வோம் என ஜனநாயக தேசியக் கூட்டணியில் வன்னியில் போட்டியிட்ட ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நேற்று (16) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட நாங்கள் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்துள்ளோம். தொடர்ந்தும் பாராளுமன்ற தேர்தல்களில் எமக்கு இவ்வாறான நிலையே வருகிறது. அதற்கு காரணம் சில அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைக்கு மாறாக பணங்களை அள்ளி இறைத்தும், பொருட்களை கொடுத்தும் எங்கள் போன்ற கட்சிகளுக்கு வரவேண்டிய வாக்குகளை மாற்றி அமைத்துள்ளார்கள்.
தேர்தல் சட்ட திட்டங்களை மீறி இதனை செய்துள்ளார்கள். காதர் மஸ்தான் உட்பட சில கட்சிகள் இந்த வேலையை செய்துள்ளன.
குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதியாக வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கொடுத்து வருகிறார்கள். அதையும் தாண்டி எந்தவிதமான பொருட்களுக்கும் விலை போகாமல் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.
ஆளுமையுள்ள ஒரு தமிழர் வன்னிக்கு தேவை என வாக்களித்து வருகிறார்கள். அந்த எதிர்பார்ப்பு தோல்வியடைந்து பணம் தான் பாதாளம் வரை பாயும் என்பதை ஒவ்வொரு தேர்தல்களும் எடுத்து காட்டுகிது. இவ்வாறான நிலமை இனியும் வரக் கூடாது.
யுத்தத்தால் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்டது தமிழினம். அவர்களின் வாக்குகளைப் பெற்று வேறு இனத்தவர்கள் தமிழரின் பிரதிநிதியாக வர வேண்டிய தேவை இல்லை. ஏன்எனில் எல்லா தகுதியும் உள்ள பல தமிழர்கள் வன்னி நிலப்பரப்பில் இருக்கிறார்கள். மண்ணுக்காக மரணித்த லட்சக்கணக்கான மக்கள், மாவீரர்கள் ஆகியோரின் ஆத்மாவுக்காக தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதனை வேறு கட்சிகள் கதைப்பதில்லை. தேர்தல்களில் தாம் வென்றால் சரி என செயற்படுகிறார்கள். மக்கள் பிழையாக வழி நடத்தப்படுவதை அவர்கள் கவனிப்பதில்லை. சரியான வகையில் மக்களை வழி நடத்தாமையால் மாற்று இனத்தவர் பின்னே போகும் நிலை வந்துள்ளது.
இந்த தேர்தலில் கூட பல மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதிகளை இழந்துள்ளது. கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. நாங்கள் சிந்திக்காத இனமாக இருந்தால் மண்ணுக்காக இரத்தம் சிந்திய போராளிகளுக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என யோசிக்க வேண்டும்.
போராளிகள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த தாய்மாரின் பிள்ளைகள். தேர்தலில் நீங்கள் இதனை உணர வேண்டியது காலத்தின் தேவை.
அவர்கள் எங்களது இனத்தவர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு வென்ற பின் எங்களது கலாசாரத்திற்காகவோ, அல்லது ஆலயத்திற்கோ வந்து வழிபடுவது இல்லை. இஸ்லாமியர்களாகவே செயற்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் வாக்குகளை சூறையாடி தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே அவர்களது வேலை.
எமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகள். தேர்தலில் தோற்றாலும் விட்டு ஓடுபவன் நான் இல்லை. எமது அரசியல் பயணம் தொடரும். ஆனால் இவ்வாறான பொருட்களை கொடுத்து, காசு கொடுத்து தொடர்ந்து தமிழ் மக்களது வாக்குகளைப் பெறலாம், வெல்லலாம் என நினைக்கும் நீங்கள் உங்களது முடிவுகளை மாற்றி உங்களது இனத்தின் பிரதிநிதியாக அவர்களது வாக்குகளைப் பெற்று வர முடிந்தால் வாருங்கள். அல்லது தேர்தலில் இருந்து ஓதுங்க வேண்டும்.
ரிசாட், மஸ்தான் போன்றவர்களுக்கு பகிரங்கமாக கூறுகின்றேன். இனத்தின் அடையாளத்தை அழிக்கும் வேலையை செய்யவேண்டாம்.
தமிழ் கிராமங்களில் பொருட்கள், பணம் கொடுத்து வாக்குளைப் பெற்றால் உங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை நாங்கள் எடுக்க வேண்டி வரும். ஆகவே உங்களது பெயர், மதம், இனத்திற்கு ஏற்ற மாதிரி வாக்குளைப் பெறுங்கள். மக்கள் விரும்பி வாக்களிப்பது வேறு. பொருட்களை கொடுத்து பிழையான விதத்தில் பெறுவது வேறு. மக்களின் வறுமையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கீழ்தரமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் தேர்தல் கலாசாரத்தை மாற்ற வேண்டும்.
ஆதாரபூர்வமாக என்னிடம் உள்ளது. காதர் மஸ்தான் பல கோடிக்கணக்கான பணங்களை செலவளித்துள்ளார். பல பொதிகள் பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளது. வேட்பாளரின் ஸ்ரிக்கர் ஒட்டிய பல வாகனங்கள் வேட்பாளர் இல்லாமல் பயணித்துள்ளது. சில வாகனங்கள் பிடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட முறைப்பாடும் இருக்கிறது. இவ்வாறான சண்டித்தன அரசியலை 2024 ஆம் ஆண்டுடன் நிறுத்தினால் ஆரோக்கியமனதாக இருக்கும்.
நீங்கள் வென்றும் ஒன்றும் செயப்போறதில்லை. அரசாங்கம் ஊழலற்ற அரசாங்கத்தை கொண்டு வரவேண்டும் என்னும் போது இந்த தேர்தலில் நீங்கள் செய்த ஊழல் ஒரு உதாரணம். இதனை பகிரங்கப்படுத்துவோம். நீதிமன்றம் வரை செல்லுவோம் எனத் தெரிவித்துள்ளார்.