ஒரு நாட்டின் பாராளுமன்றம் என்பது அந்த நாட்டினுடைய மிக உயரிய சபை. அந்த சபைக்கென தனித்துவமான விழுமியங்களும் பாரம்பரியங்களும் இருக்கின்றது. இதை யாராக இருந்தாலும் மீறுவதோ அல்லது அதில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்பதோ நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒரு விடயமாகும். இது இலங்கைக்கும் பொருந்தும்.
அந்த அடிப்படையில் நேற்று (21) 10வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கூடிய போது சுயேட்சை குழுவின் சார்பிலே வெற்றி பெற்று, பாராளுமன்றத்துக்கு தெரிவான இராமநாதன் அர்ச்சுனா நடந்துகொண்ட விதங்கள் அவர் பாராளுமன்ற பாரம்பரியங்களையும் விழுமியங்களையும் தெரியாதவராக இருக்கின்றார் என்பதோடு அவற்றை சட்டை செய்யாதவராகவும், அதை பற்றி கவலை படாதவராகவும் இருக்கின்றார் என்பது அவர் எந்தளவிற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு பொருத்தமானவர் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது.
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைவரின் ஆசனத்தில் ஒருவர் அமர்ந்திருப்பது என்பது சம்பிரதாயங்களுக்கு விரோதமானது. அந்த ஆசனத்தில் எதிர்க்கட்சி தலைவரை தவிர வேறு யாரும் அமர முடியாது.
இதை விளங்கிக் கொள்ள முடியாத அர்ச்சுனாவால் எவ்வாறு பாராளுமன்றத்தில் ஏனைய விடையங்களை சரியாக செய்ய முடியும் என்பது இன்று பலருடைய கவனத்திற்கு வந்திருக்கின்ற ஒரு விடயமாகும்.
தனி ஒருவராக பாராளுமன்றத்திற்கு சுயேச்சை குழு சார்பில் வந்திருக்கின்ற அர்ச்சுனாவிற்கு அவரின் குழுவின் சார்பிலே பல்வேறு அனுகூலங்கள் இருக்கின்றன என்பது உண்மை. அவர் பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளமுடியும், அவருக்கான நேரம் ஒதுக்கப்படும் அனைத்து விவாதங்களிலும் பல்வேறு மட்ட கூட்டங்களில் கலந்து கொள்ளமுடியும் என்பது உண்மையான விடயம்.
இதைத்தவிர பாராளுமன்றத்தில் அவர் விசேடமானவர் அல்ல. அவரும் ஏனையோரை போல ஒரு பாராளுமன்ற உறுப்பினர்தான்.
பாராளுன்றத்திற்கு ஒருவர் தெரிவு செய்யப்படுகின்ற பொழுது அவர் தன்னை தெரிவு செய்த மக்கள் அல்லது தான் சார்ந்த சமூக குழுக்களின் பிரதிநிதியாகத்தான் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளுகிறாரே தவிர தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து கலந்து கொள்ளுகிறவர் அல்ல.
ஆனால் அர்ச்சுனாவினுடைய செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அவர் தன்னை தெரிவுசெய்த மக்களுடைய கெளரவத்தையோ அல்லது அவர்களுடைய அபிலாசைகளையோ கவனத்தில் கொள்ளாதவராகவும், பாராளுமனத்திற்கு என இருக்கின்ற கெளரவத்தையும், மாண்புகளை புரிந்து கொள்ள முடியாதவராகவும் இருக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.
பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு தன்னுடைய தங்கத்தை பற்றி கதைப்பது மாத்திரமல்ல அதற்கு காணொளி எடுத்து பதிவிடுகின்ற ஒரு அர்ச்சுனால் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் கதைக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. எனவே அர்ச்சுனா தன்னை முதலில் மாற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நான் தமிழன்டா என்று சொல்வதனூடாக பாராளுமன்றத்தில் எதனையும் சாதிக்க முடியாது. இதை புரிந்து கொள்ளாத அர்ச்சுனா எவ்வாறு பாராளுமன்ற காலத்தை கடத்த போகின்றார் என்பது ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது.
எனவே அர்ச்சுனாவிற்கு பின்னால் இருப்பவர்கள், பின் புலத்தில் இருப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு அர்ச்சுனாவை சரியான முறையில் பாராளுமன்ற உறுப்பினராக நடந்து கொள்ள செய்வது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் தேவைப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகிறது.
அர்ச்சுனா நினைப்பது போல் பாராளுமன்றம் என்பது சாவகச்சேரி வைத்தியசாலை இல்லை. சாவகச்சேரி வைத்தியசாலையில் அவர் நடந்து கொண்டது போலவே பாராளுமன்றத்திலும் நடந்து கொள்ள முற்படுகிறார் என்பதையே நேற்று பாராளுமன்றத்தில் அவர் நடந்து கொண்ட முறைமை வெளிக்காட்டி நிற்கின்றது. எனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனா மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.