அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு அனர்த்தம் காரணமாக தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இன்று (07) இரவு அல்லது நாளை (08) காலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நைனாகாடு பகுதியில் நான்கு இடங்களில் நீர்விநியோக குழாய்கள் உடைப்பெடுத்ததன் காரணமாக பல பகுதிகளில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் கடந்த 12நாட்களுக்கு மேலாக தடைப்பட்டிருந்தது.
இதன்காரணமாக காரைதீவு, மாளிகைக்காடு,நிந்தவூர்,சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்தததுடன் மக்கள் பெரும் கஷ்டங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.
இந்த நிலையில் குறித்த உடைவினை சீர்படுத்தும் செயற்பாடுகள் மந்தகதியில் நடைபெற்றுவந்த நிலையில் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனால் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த உடைவினை சீர்செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.
இன்று நைனாகாடு பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறித்த பணிகளை பார்வையிட்டதுடன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் கைதர் அலி,பொறியியலாளர் மயூரன் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன் குடிநீரை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்.
தற்போது குறித்த பகுதியில் குடிநீர் விநியோக குழாய்களின் உடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை முதல் குடிநீர் விநியோகத்தினை செய்யமுடியும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.