நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் தற்போது தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பினால் மதிய உணவுப் பொதி தயாரிப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபாவில் இருந்து 1,280 ரூபாவாக அதிகரித்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.