சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில்
25 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அரசாங்க சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தமது கட்சி சார்பில் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் டலஸ் அழகப்பெரும தலைமையிலான எதிர்க்கட்சி குழுவும் பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சைஉபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்து, சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக்கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தது.
அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயன்படுத்தியதால் எமது நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன. இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அறிவுறுத்திய போதிலும், அதைப் பொருட்படுத்தாது அவசர நிலை எனக் கருதி கொள்முதல் மற்றும் பதிவு
செயல்முறைக்கு புறம்பாக மருந்துப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதோடு, இதனால் நாட்டின் பல முக்கிய மருத்துவமனைகளில் உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.