கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று, லாண்ட் மாஸ்டர் வாகனத்தை மோதித்தள்ளியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும் சொகுசு பேருந்தின் நடத்துனருமே படுகாயம் அடைந்தனர்.
சொகுசு பேருந்தின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பேருந்தில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.
காயம் அடைந்தவர்கள் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.