வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை செய்து, அவரது சடலத்தை எரித்ததுடன், எஞ்சிய எலும்புத் துண்டுகளைக் களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி குறித்த இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணைகளின்போது, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 11ஆம் திகதி கிராண்ட்பாஸ், கம்பி கொடுவவத்தை பகுதியில் அமைந்துள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையமொன்றில் குறித்த இளைஞர் சிலருடன் இணைந்து மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் அவர் காணாமல் போன நிலையில், அவருடன் மது அருந்தியிருந்த குழுவினர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி மாபோல – களு பாலம் அருகிலும் மஹர பகுதியிலும் வைத்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த இளைஞர் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனப் பழுதுபார்க்கும் நிலையத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
பின்னர் அவரது சடலம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெப்பிலியவல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் உடற்பாகங்கள் கொஸ்கம – ரன்வல பாலத்திற்கு அருகிலுள்ள களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பூகொட நீதவான், வதுபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கம்பஹா குற்றவியல் தளப் பரிசோதனை அதிகாரிகள் முன்னிலையில் பெப்பிலியவல பகுதியில் களப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாவி, தாயத்து, சில எலும்புத் துண்டுகள் மற்றும் எரிந்த கூடாரத் துணியின் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு சான்றுப் பொருட்களாகப் பொறுப்பேற்கப்பட்டன.
அதேவேளை, ரன்வல பாலத்திற்கு அருகிலுள்ள களனி ஆற்றிலும் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடைய வெல்லம்பிட்டிய மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (2) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சம்பவத்தின் பின்னணி மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்களைக் கண்டறியும் நோக்கில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








