இன மற்றும் மொழி ரீதியான பிளவுகளைக் கடந்து, அனைவரும் ஒன்றிணைந்த இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘தூய்மையான இலங்கை – அத்தம’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு கூழாவடியில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கூழாவடி பிரதான வீதியில் விசேட வடிகான் சுத்திகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், புனானை 23ஆவது படைப்பிரிவின் தளபதி, மட்டக்களப்பு இலங்கை விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நா. தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, நீண்டகாலமாக முறையாகச் சுத்தம் செய்யப்படாமல் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான நிலையில் காணப்பட்ட கூழாவடி பிரதான வீதியின் வடிகான்கள் சுத்திகரிக்கப்பட்டன.
இந்தச் சிரமதானப் பணிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,
“இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் நாம் பிரிந்து நின்றது போதும். இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்த இலங்கையர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், இத்தகைய வேலைத்திட்டங்கள் சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துவதுடன், மக்களின் மனங்களிலும் தூய்மையான சிந்தனைகளையும் நல்லிணக்க உணர்வையும் ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டார்.





















