பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை என தமிழக அரசியலில் பரபரப்பு நிலவும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்திற்கு வரவுள்ள புதிய தொழில்கள் மற்றும் தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு, மத்திய அரசுக்கு கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. அது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.