கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு இந்தியாவில் OTT தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த வகையில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் பிரபலமான OTT தளமாக உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், இனி இந்தியாவில் நண்பர்களுடன் பாஸ்வேர்டுகளை பகிர அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு கணக்கையும் ஒரு குடும்பம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி இன்று முதல், குடும்ப நபர்களை தவிர்த்து, நெட்பிளிக்ஸை பயன்படுத்தும் வெளி உறுப்பினர்களுக்கு இதுகுறித்து இமெயில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “Netflix கணக்கு என்பது ஒரு குடும்பம் பயன்படுத்துவதற்குரியது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் அவர்கள் எங்கிருந்தாலும் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தலாம். அதாவது வீட்டில், பயணத்தில், விடுமுறையில் எங்கிருந்தாலும் பயன்படுத்தலாம். மேலும் சுயவிவரத்தை மாற்றுதல் மற்றும் அணுகல் மற்றும் சாதனங்களை நிர்வகித்தல் போன்ற புதிய அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எங்கள் உறுப்பினர்களுக்கு பல பொழுதுபோக்கு தேர்வுகள் இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதனால்தான் பலவிதமான புதிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாங்கள் தொடர்ந்து அதிக முதலீடு செய்கிறோம். எனவே உங்கள் ரசனை, மனநிலை அல்லது மொழி மற்றும் நீங்கள் யாருடன் பார்த்தாலும், நெட்பிளிக்ஸில் பார்ப்பதில் திருப்திகரமான அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது. .
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியா, இந்தோனேஷியா, குரோஷியா மற்றும் கென்யா போன்ற பிற நாடுகளிலும் கணக்குப் பகிர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது., ஜூலை 20, 2023 முதல், ஆண்டின் பிற்பகுதியில் தனது வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும், கட்டணப் பகிர்வு இன்னும் அறிமுகப்படுத்தப்படாத பிற நாடுகளிலும், Netflix வேறுபட்ட அணுகுமுறையை முயற்சித்து வருகிறது. பயனர்கள் தங்கள் Netflix கணக்கை தாங்கள் வசிக்காதவர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள விரும்பினால், கூடுதல் கட்டணம் செலுத்த விருப்பம் இருக்கும். முன்னதாக இந்த ஆண்டு மே மாதத்தில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாஸ்வேர்டு பகிர்வுக்கு Netflix இந்த கட்டுப்பாடுகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.