நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், சமீப நாட்களில் கூடுதலான டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளன.
2024ம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக குருநாகல், அநுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக டெங்கு தீவிரமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 91 பேர் டெங்குத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது.
இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம்- என்றார்.