புதிய இணைப்பு
தென்கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
தென்கொரியாவிற்கு181 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
முதல் இணைப்பு
தென்கொரியாவில் இன்று (29) இடம்பெற்ற விமான விபத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விமான விபத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர்.
குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது.
தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலி ஒன்றுடன் வேகமாக மோதி விபத்திற்குள்ளானதில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.