கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைதுகள் இதுவென பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தி தற்போது வரை 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், மதுபோதையில் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் எனவும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.