பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை கடற்படையினருக்கு அபகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அளவீட்டு முயற்சி இன்று (26) 3வது நாளாகவும் கட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ம் வட்டாரத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி இன்று (26) பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினருக்கான காணி அளவீடு மேற்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சி காணி உரிமையாளர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த காணி உரிமையாளருக்கு யாழ். மாவட்ட நில அளவைத் திணைக்களத்தினரால் காணி சுவீகரிப்பு தொடர்பில் அறிவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26) காலை குறித்த காணியை அளவீடு செய்வதற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த அளவீட்டு பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதேவேளை, கடந்த இரு தினங்களாக கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் இரு இடங்களில் இவ்வாறு காணி அளவீட்டு பணி முயற்சிக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.