அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (16) இரவு இடம்பெற்றுள்ளது.
வலஸ்முல்ல, ஹொரேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வயோதிபப் பெண் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.